தொட்டில் குழந்தை திட்டம் எங்கு, யாரால் துவங்கப்பட்டது, அதன் நோக்கம் பயன் என்னவென்று இந்த பதிவில் நாம் காணலாம்.
குழந்தைகள் உரிமைகள்:
தொட்டில் குழந்தை திட்டம்: இம்மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் பாலினம், மொழி, மதம், திறமைகள் எவ்வாறாக இருப்பினும், அனைத்து நிலைகளிலும் அவர்களுக்கு உரிமை உள்ளது என்று சட்டம் சொல்கிறது. குழந்தைகள் உரிமை என்பது சுகாதாரம், கல்வி, குடும்ப வாழ்க்கை, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு, போதுமான வாழ்க்கை தரம் மற்றும் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கான உரிமைகள் என்பது அவர்களின் வளர்ச்சி மற்றும் வயதுக்கு ஏற்ற தேவைகளை உள்ளடக்கியதாகும்.
குழந்தைகள் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தம் அதாவது
United Nations on the Rights of the Child 18 வயதுக்குட்பட்டவர்களை அனைவரும் குழந்தைகள் என்றே வரையறுக்கிறது. இது குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பில் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தின் முதன்மை பங்கையும், இந்த கடமைகளை செய்ய அவர்களுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை என்பதே அரசே கூறுகிறது.
தொட்டில் குழந்தை திட்டம்:
பெண்களை கடவுளாக போற்றும், இதே பூமியில், பெற்றோர் பலர் பெண் குழந்தைகளுக்கு எதிரான மனோபாவம் கொண்டுள்ளனர். அவர்கள் ஆண் குழந்தைகளை நேசிக்கிறாா்கள், ஆண் குழந்தை பெற்றால்தான் ஆண்மை உள்ளவர்கள் என கருதுகின்றனர்.
சமுதாயத்தில் ஆண் குழந்தைகளை அதிகம் விரும்பும் மனோபாவம் கொண்ட சமூக கட்டமைப்பினால், பெண் குழந்தைகள் தங்கள் குழந்தை பருவம் முதல் முதுமை பருவம் பெரும் சவால்களை காலம்காலமாக சந்தித்து வருகின்றனர். பாலின தேர்வு மூலம் பெண் கருக்கலைப்பு, பெண் சிசுக்கொலை போன்ற பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் பல்வேறு இடங்களில் பல்கிப்பெருகி இருந்தன. தற்போதும் தொடர்கிறது.
பெண் சிசுக்கொலை என்றால் என்ன?:
நவீன மருத்துவத்திற்கு முன்பு, ஒரு தாய் பெண் குழந்தையை பெற்றெடுத்தால், கிராமப்புறங்களில் உள்ள பெரியவர்கள் நிர்பந்தம் காரணமாகவும், திருமண காலங்களில் வரதட்சணைக்காக அதிகம் செலவிட வேண்டும் என்றும், ஆண் குழுந்தை பெற்றால்தான் ஆண்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கள்ளிப்பால் பெண் குழந்தைகளுக்கு ஊற்றி கொன்ற வரலாறும் உண்டு.
பொதுவாக சில மாவட்டங்கள் தாய்மார்கள் கருவுறும்போது, கருவில் இருக்கும் அல்லது பிறந்த குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், அதனை கருவில் இருக்கும்போதோ அல்லது குழந்தை பிறந்த பின்பே கொலை செய்வது பெண் சிசுக்கொலை என வரையறுக்கப்படுகிறது.இந்த கொலை கிராமம், நகர்புறம் என வேறுபாடின்றி அரங்கேறியது. கிராமப்புறங்களில் மருத்துவச்சியால் கொலை நிகழ்த்தப்படும்.கணவர் வழியில் உள்ள குடும்ப உறுப்பினர்களால் அதாவது அவர்கள் தாத்தா, பாட்டியால் பெண் சிசுக்கொலை நிகழ்த்தப்படும். நகர்புறங்களில் கதிரியக்க மின்னணுக் கருவிகள் மூலம் நவீன மருத்துவர்களாலும் பெண் சிசுக்கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.
தொட்டில் குழந்தை திட்டம் அறிமுகப்படுத்தியவர் யார்? :
TN Cradle Baby Scheme in Tamil பெண் சிசுக்கொலை என்பது தமிழ்நாட்டில் காலம்காலமாக இருந்தது. பெண் குழந்தை பிறந்த பின்னா், சுமை என கருதி பெற்றோர் கொலை செய்வது மற்றும் சாக்கடை மற்றும் குப்பை தொட்டிகளில் வீசிச்செல்வது வாடிக்கையாக இருந்தது. இதனை அறிந்த
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா அவர்கள், பெண் குழந்தை கொலையை முற்றிலும் ஒழித்திடும் வகையில், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும் வகையிலும், 1992ம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்தை தொடங்கிவைத்தார்.
தொட்டில் குழந்தை திட்டம் நோக்கம் :
அதன்படி, தமிழக அரசு அதன் அரசு மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் தொட்டில் வைக்கப்பட்டன. இதில் தாய்மார்கள் தாங்கள் விரும்பாத பெண் குழந்தைகளை தொட்டில்களில் பாதுகாப்பாக விட்டுச்செல்ல வசதி செய்யப்பட்டது. இதன் நோக்கம் பெண் குழந்தைகள் மரணப்பிடியிலிருந்து தப்ப வேண்டும் என்பது மற்றும் பெண் குழந்தகள் பாலின விகிதத்தை அதிகப்படுத்துதல் ஆகும். இது தமிழக அரசின் தனித்துவமான நடவடிக்கை என போற்றப்பட்டது.இந்த நடவடிக்கையால், பெற்றோர் வறுமை காரணமாகவும், பெண் குழந்தைகள் மீது விருப்பமின்மை, மாற்றுதிறனாளியாக இருக்கும் குழந்தைகளை இத்திட்டத்தின் கீழ் சேர்க்க தொடங்கினர்.
இதன்மூலம் பச்சிளங்குழந்தைகள் கொல்லப்படுவதிலிருந்து காப்பற்றப்பட்டு, குழந்தைகளே இல்லாத தம்பதியினருக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சட்டப்பூர்வமாக தத்து கொடுக்கும் நடைமுறை துவங்கியது.
பெண் சிசுக்கொலை அதிகம் இருந்த மாவட்டங்கள் எவை?
மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பெண் சிசுக்கொலை அதிகம் இருந்த மாவட்டங்களாக கண்டறியப்பட்டன. அதன்படி 2001ம் ஆண்டு, இந்த திட்டம் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தமிழக அரசு விரிவுப்படுத்தி செயல்படுத்தப்பட்டது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பெண் குழந்தை பிறப்பு விகிதிம் குறைவாக இருந்ததால் மேற்கண்ட மாவட்டங்களிலும் தொட்டில் குழந்தை திட்டம் 2011ஆம் ஆண்டு விரிவுப்படுத்தப்பட்டது.
தொட்டில் குழந்தை திட்டம் - மீட்கப்பட்ட பெண் குழந்தை விவரம்
தமிழக அரசு, சட்டமன்றத்தில் தெரிவித்த தரவுகளின் படி, இந்த திட்டம் தொடங்கியது முதல் ஜூலை 2021ம் ஆண்டு வரை மொத்தம் 5,656 குழந்தைகள் (1229 -ஆண், பெண் - 4,427) இறப்பின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொட்டில் குழந்தை திட்டம் நிதி எவ்வளவு ஒதுக்கப்படுகிறது?
தமிழக அரசு
சமூக நலத்துறையின் கீழ், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு, ஆண்டுதோறும் தமிழக அரசு ரூ.49.31 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்வதான அதன் பட்ஜெட் குறிப்பில் தெரிவிக்ப்பட்டுள்ளது.
குழந்தைகள் பராமரிப்பு இல்லம் எங்கு உள்ளது?
சிறப்பு கவனம் தேவைப்படும் இந்த குழந்தைகளை பராமரிப்பதற்காக கீழ் கண்ட நான்கு இல்லங்களுக்கு அரசு மானியம் வழங்குகிறது.தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ், பெறப்பட்ட குழந்தைகள் சில நேரங்களில் பல்வேறு காரணங்களால் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளாக உள்ள குழந்தைகள் பெற்றோர்களால் தத்தெடுக்கப்படுவதில்லை. இந்த முரண்பாட்டை எதிர்கொள்ள சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்கு, தனியார் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் இல்லங்களை சிறப்பு திட்டமாக மாநில அரசு தொடங்கியது.
- பிரேமவாசம், காஞ்சிபுரம்
- ஸ்ரீ அருணோதயம் டிரஸ்ட் சென்னை,
- பேமிலிஸ் பார் சில்ரன், கோயம்புத்தூர்,
- கம்யூனிட்டி ஹெல்த் எஜூகேஷன் சொசைட்டி திருவள்ளுர்.
-
இந்த இல்லங்களில் தற்போது 137 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு குழந்தைக்கு தமிழக அரசு ரூ.120 வீதம் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளை பராமரிப்பதற்காக தொண்டு நிறுவனம் மானியம் வழங்கப்படுகிறது.2021-2022 ஆண்டு திருத்த வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ரூ.37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொட்டில் குழந்தை திட்டம் பயன் என்ன?
முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தகவலின்படி, சேலம் மாவட்டத்தில் 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, குழந்தைகள் பாலின விகிதம் (1000 ஆண் குழந்தைகளுக்கு) 851 ஆக இருந்தது என தெரிவித்திருந்தார்.
தொட்டில் குழந்தை திட்டம் குழந்தை ஆர்வலர்கள் பார்வையில்
குழந்தை ஆர்வலர்கள் பிபிசி செய்திக்கு அளித்த பேட்டியில், மாநிலத்தில் குழந்தை பாலின விகிதம் என்பது குறைவாக இருப்பதாகவும், தொட்டில் குழந்தைகள் பெண் சிசுக்கொைல தடுத்துள்ளதாகவும், ஆனால், கருக்கொலை தடுக்கவில்லை என்றும் அதில் கூறியுள்ளார்.
குழந்தை நல ஆர்வலர் தேவநேயன் பிபிசிக்கு அளித்த பேட்டியில், அவர் தற்போது இந்த திட்டம் இருக்கிறது ஆனால், இல்லை என்பதே இன்றைய நிலை என்று கருத்து தெரிவித்துள்ளார்.மேலும், அவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில், மாநிலத்தில் ஏதோ ஒரு வடிவத்தில் இன்றும் கருக்கொலைகள் நடப்பதாகவும், தொட்டில் குழந்தை திட்டம் மட்டுமே பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்துவிட முடியாது என்றும், பாலினசமத்துவம், பாலின புரிதல் ஆகியவற்றை குறித்து குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் புாிதலை ஏற்படுத்த வேண்டும். அதுவே பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும், என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு குழந்தை உரிமை கண்காணிப்பகத்தின் ஆண்ட்ரூ என்பவர் அளித்த பிபிசிக்கு அளித்த பேட்டியில், இன்றும் கூட குழந்தைகளை குப்பை தொட்டில் போடும் சம்பவங்கள் நடக்கின்றன. இந்த திட்டத்திற்கான விழிப்புணர்வு போதிய அளவில் மக்கள் மத்தியில் இல்லை என்று அவர் தெரிவிக்கிறார்.மேலும் குழந்தையை தங்களின் அடையாளம் தெரியாமல் போட விரும்புபவர்கள் அது முடிவதில்லை என்பதாலும் தொட்டில் குழந்தைகள் வருவது குறைந்துள்ளது என்று அவர் கூறுகிறார்.
தேவநேயன் அவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில், கர்ப்ப காலத்தில் பதிவை சரியாக பின்பற்றினால், முறைகேடற்ற தத்தெடுப்பு, எடை குறைவு குழந்தைகள், ரத்த சோகை குழந்தை ஆகியவற்றை கண்டறிந்துவிடலாம். ஆனால், கர்ப்ப கால பராமரிப்பு மற்றம் தொட்டில் குழந்தைக்கான தொடர்பு குறித்து இங்கு யாரும் யோசிப்பது இல்லை. இதனை கலைய வேண்டும் என்று கோரிக்கை ைவத்துள்ளார்.
பெண் குழந்தைகளை பாதுகாப்போம், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்போம்.