தமிழ்நாடு அரசு இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் நிறைவேறுமா என்ற எதிா்பார்ப்பு அவர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கடந்த 15ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த இருந்த நிலையில், அதற்கு முன்பு முதல்வரை சந்தித்து பேசியதன் காரணமாக, அந்த போராட்டத்தை தள்ளி வைத்தனர்.இதற்கிடையில், ஜாக்டோ ஜியோ வரும் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. அதற்கு முன்பு இன்றைய பட்ஜெட்டில் அவரது முக்கிய கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் இதர கோரிக்கைகள் நிறைவேறுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதில், எந்த அறிவிப்பு வெளியாகிவில்லை என்றால், திட்டமிட்டப்படி 26ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் தொடங்கும் என்று ஜாக்டோ ஜியோ வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை, பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், கணினி ஆசிரியர்கள் வேலை வாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளனர்.