டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழையகோட்டை பள்ளி மாணவர்கள் பேருந்து வசதியின்றி எட்டு கிலோமீட்டர் பயணிக்கும் அவலம் அரங்கேறி வருகிறது.
இந்த விவகாரத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம் பழையகோட்டை கிராமத்திற்கு உட்பட்ட பழையகோட்டைப்புதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் கஸ்பா பழையகோட்டை, குட்டப்பாளையம், மேலப்பாளையம் ஆகிய ஊர்களில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளும் உள்ளன. பழையகோட்டைப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பை முடிக்கும் வெங்கரையாம்பாளையம் நல்லம்மாள்புரம், கஸ்பா பழையகோட்டை, கண்ணியன்கிணறு, இச்சிக்காட்டுவலசு, சேமலைவலசு ஆகிய ஊர்களைச் சேர்ந்த குழந்தைகள் ஒன்பதாம் வகுப்பில் படிக்க உயர்நிலைப் பள்ளிக்காக எட்டு கிலோமீட்டர் செல்ல வேண்டியுள்ளது. பள்ளிக்குச் செல்லவும் பள்ளி முடிந்து திரும்பவும் சரியான நேரத்தில் அரசுப் பேருந்து வசதியோ தனியார் பேருந்து வசதியோ இல்லாததால் மாணவர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகின்றனர். இதனால், குழந்தைகள் பள்ளிக்குக் காலையில் ஏழு மணிக்கு புறப்பட்டு, மாலையில் ஆறு மணிக்கு வீடு திரும்புகின்றனர். நீண்ட தூரத்திற்கு குழந்தைகளால் மிதிவண்டியில் செல்ல முடிவதில்லை. குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி சில பெற்றோர்கள் அழைத்துச் செல்வதும் மாலையில் அழைத்து வரவும் செய்கின்றனர். இதனால், பெற்றோர்கள் வேலை இழப்பு, வருமான இழப்பு, வாகனச் செலவு போன்ற சிரமங்களுக்கு ஆளாகின்றனர். மழைக் காலங்களில் குழந்தைகள் பள்ளிக்கே செல்ல முடியாத நிலை உள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனா். மேலும், பழையகோட்டைப்புதூரில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கு வெங்கரையாம்பாளையம், நல்லம்மாள்புரம், குட்டப்பாளையம் சேமலைவலசு ஆகிய ஊர்களில் உள்ள் குழந்தைகள் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்தும் மிதிவண்டியிலும் வருகின்றனர். குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி தனியார் வாகனம் மூலம் அனுப்பும் பெற்றோர்கள் நாளொன்றுக்கு 100 ரூபாய் செலவழிக்கின்றனர். பழையகோட்டைப்புதூரில் உள்ள நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டி பொதுமக்கள் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் வசூல் செய்து அரசுக்குச் செலுத்தி விண்ணப்பம் அனுப்பி இரண்டாண்டுகள் ஆகியும் இன்னும் அரசின் அனுமதி கிடைக்கவில்லை. மாவட்ட கல்வி அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். “எங்கள் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க பழையகோட்டைப்புதூர் நடுநிலைப் பள்ளியை உயர்நிலையாக மாற்ற அரசு உடனே அனுமதி வழங்கவேண்டும். மூன்று கிலோமீட்டர் தூரத்திலிருந்து பழையகோட்டைப்புதூர் நடுநிலைப் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்குப் பள்ளி வாகன வசதி அல்லது பேருந்து வசதி செய்து தர வேண்டும்”, என்றும் பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.