தமிழக அரசு உத்தரவை தொடர்ந்து, தலைமையாசிரியர்கள் பள்ளிக்கு நேற்று வந்தனர், மேலும் அரசு கூறியுள்ள பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் திருவில்லிபுத்தூர் அருகே அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ரூபாய் ஆயிரம் வழங்கினார். தமிழக பள்ளி கல்வித்துறை ஜூன் 14ம் தேதி முதல் பள்ளிகளை திறந்து, மாணவர் சேர்க்கை, மாற்று சான்றிதழ் வழங்கும் பணி உள்ளிட்ட நிர்வாக பணிகளை தலைமை ஆசிரியர்களை கொண்டு நடத்த உத்தரவிட்டிருந்தது. இதன்படி விருதுநகர் மாவட்டம், திருவில்லிப்புத்தூர் அருகே படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி முன்னிலையில் நேற்று நடந்தது. அப்போது புதிதாக முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்களுடன், தனது சொந்த செலவில் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ரூ.1000 வழங்கினார். அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஆண்டில் இப்பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்ட்ராய்டு மொபைல் போன்களை தலைமை ஆசிரியர் வாங்கி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, அவர் கூறும்போது, இந்த பள்ளியில் 5ம் வகுப்பு வரை உள்ளது. அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக நேற்று முதலாம் வகுப்பு சேர வந்த மூன்று மாணவர்களுக்கு தலா ஆயிரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளியில் சேரும் அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், என்றார்.