2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பை இழந்த ஆசிரியர்கள் அமைச்சர் செங்கோட்டையனிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று 4,500க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் நடந்தது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு (மதிப்புகாண்) வெயிட்டேஜ் முறையில் பணி நியமனம் செய்யப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். ஆனால், தேர்ச்சி பெற்ற ஏழ ஆண்டுகள் ஆன நிலையில், இதவரை பணிநியமனம் வழங்கப்படவில்லை. ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஏழு ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் கடந்த ஏழு ஆண்டுகளாக பணி நியமனத்திற்காக காத்திருந்தனர். ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றதால், தனியார் பள்ளிகளிலும் வேலை கிடைக்காமல், வேறு பணிகளுக்கும் செல்ல முடியாமல் உள்ளனர். இந்த நிைலயில், நேற்று கோபியில் உள்ளள அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் சென்றனர். அவர்களை காவல்துறையினர் கோபி-சத்தி சாலையிலேயே தடுத்து நிறுத்தினர். அதை தொடர்ந்து நம்பியூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற அமைச்சர் செங்கோட்டையனை முற்றுகையிட்ட ஆசிரியர்கள் பணி நியமனம் வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை மனுவை அளித்தனர். அவர்களது கோரிக்கையை முதலமைச்சரிடம் கூறி பரிசீலனை செய்வதாக அமைச்சர் கூறினார்.