ஆசிரியர் தகுதிதேர்வு கல்வி அமைச்சரின் கசப்பான பதில்
கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வு எனப்படும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நிலையில் 2022ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி கடந்த மாதம் 14ம் தேதி முதல் கடந்த 13ம் தேதி (நேற்று முன்தினம்) வரை விண்ணப்பிக்க தேர்வா்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கடைசி மூன்று தினங்களாக விண்ணப்பிக்க முடியாமல் விண்ணப்பதாரர்கள் பலர் மிகுந்த சிரமம் அடைந்தனர். அவர்களில் சிலர் கடைசி மணி நேரம் வரை விண்ணப்பிக்க முயன்றபோதும், கால அவகாசம் முடிந்ததால் விண்ணப்பிக்க முடியாமல் போனது. இதையடுத்து விண்ணப்பிக்க அவகாசத்தை மேலும் வழங்க அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில், பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது, ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடைசி மூன்று நாட்களில் மட்டும் 1.25 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்தமாக இத்தேர்வுக்கு 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். எனவே ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம் வழங்க தேவையில்லை என்று முதல் அமைச்சர் சார் அலுவலகத்தில் இருந்து சொல்லியிருக்கிறார்கள். ஆகவே, அந்த நடைமுறைப்படியே ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அடுத்தகட்ட ஆயத்தப்பணிகள் இருக்கும், என்றார்.
இதனால், தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.