பள்ளி கல்வித்துறை சமீபத்தில் வெளியிடப்பட்ட முதுகலை பட்டதாரி பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பில், கணினி அறிவியல் காலிபணியிடங்கள் நியமிப்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாததால் கணினி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் மேல்நிலை கல்வி பாடங்களில் உள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் காலிபணியிடங்கள் நிரப்ப தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நியமிக்கலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். மேலும் அவர்களுக்கு மாதம் தொகுப்பூதியத்தில் ரூ.10 ஆயிரம் சம்பளம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக, தமிழக அரசு ரூ. 13.87 கோடி நிதியும் ஒதுக்கியது.
தமிழகம் முழுவதும் 2,774 முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி பணியிடங்கள் காலியாக உள்ளது எனவும், அதனை நிரப்புக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம் இயற்பியல், வேதியியல், உயரியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், வரலாறு, புவியியல் மற்றும் வணிகவியல் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என அறிவிப்பில் தொிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயத்தில் கணினி அறிவியல் பாடம் குறித்து எந்த அறிவிப்பு இடம்பெறவில்லை.
இதுகுறித்து, வேலையில்லா கணினி ஆசிரியர் கூறும்போது, மற்ற பாடங்கள் போலவே, கணினி ஆசிரியர் பாடத்திலும் காலிபணியிடங்கள் அரசு பள்ளிகளில் உள்ளன. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் முழுமையான கணினி அறிவியல் பாடம் சார்ந்த தகவல்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நாங்கள் அரசு கவனத்திற்கு பல முறை எடு்த்துசென்றும், கல்வி அதிகாரிகள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கணினி அறிவியல் பாடத்தை அணுகுகிறார்கள், அதற்கான முக்கியத்துவமும் அளிப்பதில்லை.
தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதிலும் கணினி அறிவியல் பாடத்தை ஒரு பொருட்டாக கமிஷனர் நந்தகுமார் கருதவில்லை என கருதுகிறோம். டிஜிட்டல் இந்திய என கூறிக்கொள்ளும் நிலையில், கணினி பயன்பாடு எவ்வளவு முக்கியத்துவம் என்பதும் அனைவரும் அறிவார்கள். ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவியல் வேண்டுமென்றே புறக்கணிப்பது உள்நோக்கம் கொண்டதாக நாங்கள் கருதுகிறோம். போராட்டம் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை, இவ்வாறு, அவர் கூறினார்.
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வெ.குமரேசன் கூறும்போது, ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்பது போல், இந்த ஆட்சியிலும் தற்காலிக பணி நியமனத்தில் கூட கணினி ஆசிரியர்கள் நியமிக்க இந்த அரசு முன்வரவில்லை என்பது வேதனை அளிக்கிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் எங்களது கோரிக்கை அன்புமணி ராமதாஸ் அவர்களிடம் கொண்டு சென்று, அவரது அறிக்கையின் மூலம் முன்னாள் பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ரூ. 7 ஆயிரம் சம்பளத்தில் கணினி அறிவியல் பட்டதாாி ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் மூன்று மாத அடிப்படையில் அரசு பள்ளியில் நியமித்தனர்.
நாங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் புறக்கணிக்கப்படுவது ஒட்டுமொத்த ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளிக்கிறது. எனவே தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அவர் கூறினார்.
கணினி அறிவியல் பாடம் புறக்கணிப்பு உங்கள் கருத்து குறித்து கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்