சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் பள்ளி கல்வி அலுவலக வளாகத்தை முற்றுகையிட்ட இடைநிலை ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள பள்ளி கல்வி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.சங்க பொதுச்செயலாளர் ஜெ.ராபர்ட் தலைமையில் ஆசிரியர்கள் முற்றுகையிட வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காவலர்கள் ஆசிரியா்களை பள்ளி கல்வி அலுவலக வளாகத்தில் நுழையவிடாமல் பிரதான கதவுகளை மூடியிருந்தனர். இருப்பினும் போராட்ட ஆசிரியர்கள் நுழைவாயிலை முற்றுகையிட்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்படவே காவல்துறையினர் அவரை கைது செய்து அங்கிருந்து அழைத்து சென்றனர். அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.