தமிழக அரசு உத்தரவின்படி, செப்டம்பர் மாதத்தில் கல்வி நிலையங்கள் திறக்க மாவட்ட அளவில் தீவிர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே, பள்ளி கல்வித்துறை சார்பில், பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, அனைத்து ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதன் ஒரு பகுதியாக, அந்தந்த மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்களால் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆசிரியர்கள் விவரம், தடுப்பூசி போடாத விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இன்னும் பல ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பள்ளி, கல்லூரி திறப்பு, பாதுகாப்பு அம்சங்கள், மாணவர்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து மாவட்ட அளவில் உள்ள பள்ளிகல்வி, உயர்கல்வி அலுவலர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் கல்லூரி கல்வி இணை இயக்குனர், அனைத்து அரசு, தனியர் கல்லூரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், தடுப்பூசி செலுத்தி கொள்ளாத கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என எச்சாித்துள்ளார். மேலும் அவர் கூறியது, முதல்வர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களின் விவரம் தயார் செய்ய வேண்டும், மேலும் கல்லூரிகளில் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.