தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவும் நிலையும், சமீபகாலமாக பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா பாதிப்பு அடைந்து வருவதாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து செய்தி வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் பெரம்பலூர் நகராட்சி, எளம்பலூரில் வசிக்கும் 49 வயது மதிக்கதக்க சித்தளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கு கடந்த 15ம் தேதி சளி மற்றும் இருமலுடன் காய்ச்சல் ஏற்பட்டது. மருந்து உட்கொண்டு சரியாகாததால், அங்குள்ள அரசு தலைமை மருத்துவமனையில் இருதய எக்ஸ்ரே பரிசோதனை செய்துள்ளார். மருத்துவர் பரிந்துரை பேரில் மருந்துகள் எடுத்த கொண்ட போதிலும் காய்ச்சல் பாதிப்பு இருந்தது. பின்னர் கடந்த 19ம் தேதி திருச்சி தனியாா் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், அங்கேயே சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இவரும் கடந்த 10ம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, இவர் கடந்த 17ம் தேதி பள்ளியில் நடந்த குன்னம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சியில் தனது மனைவி சிறுகுடல் பள்ளி ஆசிரியையுடன் கலந்துகொண்டார். சுகாதாரத்துறை உத்தரவு பேரில், சித்தளி ஆசிரியரின் மனைவி, திருச்சி தனியார் கல்லூரியில் படிக்கும் மகன் உள்ளிட்ட அதே பகுதியை சேர்ந்த 50 பேர், இவருடன் பயிற்சி தேர்தல் அலுவலர்கள் 30 பேர், சித்தளி நடுநிலை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் 7 பேர், சிறுகுடல் பள்ளி ஆசிரியர்கள் என 100 பேருக்கு கொரோனா பாிசோதனை நடத்தப்பட்டது. இதனால், தேர்தல் பயிற்சிக்கு சென்றவர்கள் அதிா்ச்சி அடைந்தனர். இதில் கொரேனா பாதித்தவரின் மனைவி மற்றும் திருச்சி தனியார் கல்லூரி மாணவனான மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களும் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் அங்கு தடுப்பு பணியில் மேற்கொண்டு வருகின்றனர், அவர்கள் பணியாற்றிய இரண்டு பள்ளிகளையும் தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளனர்.