ஆசிரியர்களுக்கான தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்க கல்வித்துறை அலுவலர்கள் லஞ்சம் கேட்டு கட்டாயப்படுத்துவதாக ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொடக்க கல்வியில் பணியாற்று வரும் நிலையில், அவர்கள் பணியாற்றும் பள்ளிகளை, வட்டார கல்வி அலுவலர்கள் நிர்வகித்து வருகின்றனர். ஊதியம், பிற பண பலன் மற்றும் இதர சலுகைகள் இவர்கள் பெற்று ஆசிரியர்களுக்கு தருகின்றனர். இதனை சாதகமாக்கி கொள்ளும் சில கல்வி அலுவலர்கள் அட்டை பூச்சி ரத்தத்தை உறிஞ்சுவது போல், ஆசிரியர்களிடம் பணத்தை பிடுங்கி விடுவதாக தமிழகம் முழுவதும் இந்த குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், சேலத்தில் ஆசிரியர்களின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் லஞ்சம் கேட்டு கட்டாயப்படுத்துவதாக வட்டார கல்வி அலுவலர்கள் மீது குற்றம்சாட்டி, ஆசிரியர்கள் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த ஆடிேயாவில், தேர்வுநிலைக்கு அவ்வப்போது பணம் வழங்கி கொண்டே இருக்க வேண்டும். முதலில் கேட்டது இல்லாமல் மீண்டும், மீண்டும் பணம் கேட்கின்றனர். கொடுத்தால்தான் ஆர்டர் கிடைக்கும். எஸ்ஆர் – இல் கையெழுத்து இல்லன்னு சொல்லி அதுக்கு ஒரு வசூல் போட்டுடாங்க, என இரு ஆசிரியர்கள் பேசிக்கொள்கின்றனர். இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர் கூறும்போது, சேலம் மாவட்டத்தில் 21 ஒன்றியங்களில் 1,100 மேற்பட்ட துவக்க, நடுநிலை பள்ளிகள் உள்ளன. சிற்ப கலைக்கு பெயர்போன ஒன்றியத்தில் 68 பள்ளிகளில் 350 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அங்குள்ள வட்டார கல்வி அலுவலர்கள் எதற்கெடுத்தாலும் வசூல் என்ற ரீதியில் செயல்படுவது ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தேர்வு நிலை, சிறப்பு நிலை, உயர்கல்வி முன் அனுமதி, அதற்கான ஆணை வழங்க நிலுவை தொகை, ஊக்க ஊதியம் பெற்றுதருதல் என ஒவ்வொரு இன்ச் அசைவுக்கும் தனியாக கவனிக்க வேண்டும் என ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி வருகின்றனர். பணிபதிவேட்டில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும், அதற்கு தனியாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு முறையும் ஆசிரியர்கள் அவர்களுக்கு கப்பம் கட்ட வேண்டியுள்ளது. இதனை நேரடியாக மற்றும் வங்கி கணக்கு மூலமாக பெறு மறுக்கும் அவர்கள், அவர்கள் அலுவலகத்தின் முன்புள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் கொடுத்துவிட்டு செல்ல வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதற்காகவே, தனியாக 5 ஆசிரியர்கள் நியமித்து கல்லா கட்டி வருகின்றனர். அவர்களும் பள்ளிக்கு செல்லாமல், குறுநில மன்னர் போல் அலுவலர்களுக்கு ஆதரவாக செயல்படுவதால், ஆசிரியர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மாவட்டம், மாநிலத்தில் உள்ள கல்வி அதிகாரிகள் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது. (நாளிதழ் செய்தி அடிப்படையிலானது)