நடப்பு கல்வியாண்டில், கோவையில் மட்டும் 35க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்தனர். 13 பேருக்கு நல்லாசிரியர் விருது கிடைத்தது. ஆசிரியர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. தொடர்ந்து பணியாற்றும் ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் கூடுதலாக 1 மதிப்பெண் என ஆசிரியர் பெற்ற பயிற்சிகள், மாணவர்களுக்கான சிறப்பு கற்பித்தல் முறைகள் உள்ளிட்ட 35 அம்சங்களில் 100 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
கோவை மாவட்டத்தில் விருதுக்காக விண்ணப்பித்த ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் சரியாக மதிப்பிடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்தாண்டு கல்வி அதிகாரிகள், நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பதாரர்களின் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று, அவர்களின் கற்பித்தல் முறை உள்ளிட்ட செயல்பாடுகளை வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவு செய்தனர்.நடப்பு கல்வி ஆண்டில் கல்வி அதிகாரிகள் பள்ளிகளுக்கு வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேரமின்மை காரணமாக அதிகாரிகள் பள்ளிகளுக்கு செல்லவில்லை, நேரடியாக ஆசிரியர்களை நோ்காணுலுக்கு அழைத்ததாக கல்வித்துறையினர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விளக்கம் கேட்க, மாவட்ட கல்வி அதிகாரிகள் தொடர்புகொண்டபோது, அழைப்பை அவர்கள் ஏற்கவில்லை. கோவை தினமலர்.