Teacher resign job by Ennum Ezhuthum scheme | எண்ணும் எழுத்தும் திட்டம் ஆசிரியர் பணி விலகல்
Teacher resign job by Ennum Ezhuthum scheme
தமிழக அரசின் எண்ணும் எழுத்தும் திட்டத்தால், இடைநிலை ஆசிரியர் பணி விலகல் கடிதம் வழங்கியிருப்பது சக ஆசிாியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காலகட்டத்திற்கு பின், மாணவர்கள் மத்தியில் கல்வி இடைவெளியை களைவதற்காக, தமிழக அரசு எண்ணும் எழுத்தும் திட்டம் 1 முதல் 3 வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகம் செய்தது. மாணவர்கள் கற்றல் நிலைக்கு ஏற்றவாறு, மூன்று தரநிலையாக பிரித்து, கற்பித்தல் பணி நடந்து வருகிறது. இந்த திட்டம் 4, 5 வகுப்புகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஐபெட்டா அண்ணமாலை அவர்கள் எண்ணும் எழுத்து திட்டம் தோல்வி அடைந்துள்ளதாகவும், இதனை திரும்ப பெற வேண்டும் என நாளிதழ்களுக்கு பேட்டி அளித்திருந்தார். எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த கு.க குப்பண்ணன், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மதிப்பீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனித்தனி வகுப்புகளாக பாடநூல்கள் மூலம் கற்பிக்காமல் வகுப்புகளை ஒன்றிணைத்து பயிற்சி புத்தகங்கள் மூலம் கற்பிக்க கட்டாயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது ஆசிரியர் பணியில் இருந்து விலகுவதாக விலகல் கடிதம் வழங்கியுள்ளார். இதுதொடர்பாக வட்டார கல்வி அலுவலர் அவரிடம் விசாரணை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.