தொலைத்தூர தேர்வு மையங்களில் தேர்வு பணி ஒதுக்கியதை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் திடீர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 1ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கிடையில், தேர்வு ஆயத்த பணிகள் மாவட்ட அளவில் முடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அறை கண்காணிப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள், பறக்கும்படை உள்ளிட்ட தேர்வு பணிகள் ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர்களுக்கு தேர்வு பணி தொலைத்தூர தேர்வு மையங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, கிணத்துக்கடவு ஒன்றியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வால்பாறை ஒன்றிய தேர்வு மையங்களுக்கு தேர்வு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோல் பல பெண் ஆசிரியர்களுக்கு தொலைத்தூரத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் அதிருப்தி அடைந்தனர்.இதுதொடர்பாக, அவர்கள் முதன்மை கல்வி அலுவலரிடம் முறையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் கண்டுகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஆத்திரம் அடைந்த ஆசிரியர்கள் இன்று இரவு முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அங்கிருந்த முதன்மை கல்வி அலுவலர் தேர்வு பணியில் எவ்வித மாற்றம் இருக்காது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், போராட்டம் நாளையும் தொடரும் என தெரிவித்துள்ளனர்.