தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தொடக்க கல்வித்துறை(2025-2026 )அறிவித்துள்ள ஆசிரியர் பணியிட மாறுதல் மற்றும் பணிநிரவல் கலந்தாய்வினை தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பின் ஏற்படும் காலிப் பணியிடங்களை கொண்டு மாறுதல் கலந்தாய்வு மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.
தொடக்கக் கல்வி துறையால் 2025-2026 கல்வி ஆண்டிற்கான ஆசிரியர்களின் பொது மாறுதல் மற்றும் புதிய நேரடி பணி நியமன கலந்தாய்விற்கான வழிகாட்டுதல் மற்றும் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி துறையில் 2500 புதிய ஆசிரியர் பணியிடங்கள் நியமனத்திற்கான அறிவிப்பிற்கு மகிழ்ச்சியையும், வரவேற்பும் தெரிவித்துக் கொள்கிறோம்.2025-2026-ல் நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்விற்கு தமிழ்நாடு தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் பல ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். தொடக்கக் கல்வித் துறையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பதவி உயர்வு ஏதும் அளிக்கப்படாமல் உள்ள நிலையில், மொத்த காலி பணியிடங்களில் பெரும்பான்மையானவை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி தலைமையாசிரியர் பணியிடங்களாக உள்ளது.மொத்த காலி பணியிடங்களில் இடைநிலை ஆசிரியர்களின் காலிப்பணியிடம், பணி நிரவலுக்கு பின் மிக மிகக் குறைவாகவே இருக்கும் என அறிகிறோம். பல ஒன்றியங்களில் இடைநிலை ஆசிரியர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பணியிடங்கள் பல காலியாக இருந்தும், பதவி உயர்வு வழங்க முடியாத இந்த அசாதாரண சூழலை உடன் சீர் செய்து ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கவும், பதவி உயர்வு வழங்கி பின்னர் ஏற்படும் காலி படங்களின் கொண்டு பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு, புதிய பணியிடங்களை நிரப்புவதும் ஆசிரியர்களுக்கும், தொடக்கக்கல்வி துறைக்கும் முழுமையான பயனை அளிக்கும். அவ்வாறு இல்லாமல் தற்போது அறிவித்துள்ள மாறுதல் கலந்தாய்வு பெரும்பான்மையான ஆசிரியர்களுக்கு பயன் தராது என்பதால் நீண்ட நாட்களாக வழங்கப்படாமல் உள்ள பதவி உயர்வு வழங்கிய பின்னர் ஏற்படும் காலி பணியிடங்களைக் கொண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு நடத்த வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.