Teacher Association Ultimate Role – ஆசிரியர் சங்கங்களின் வேலை என்ன?
Teacher Association Ultimate Role
ஆசிரியர் வாட்ஸ்ப் செய்தி
ஆசிரியர்கள் சங்கத்தினர் என்பவர்களும் ஆசிரியர்கள் தானே. அவர்கள் பள்ளிக்கு செல்வதும் கற்பித்தல் உள்ளிட்ட மற்ற செயல்பாடுகளை செய்ய வேண்டும் என்ற வரையறை இல்லையா?
ஒரு குறிப்பிட்ட சங்கத்தை சேர்ந்தவர்கள் எப்போதும் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து ஆசிரியர்கள் குழுக்களில் பகிர்வது நடந்து வருகிறது. பள்ளிக் கல்வி ஆணையர் இருந்த போதும் இவர்களின் இந்த செயல்பாடுகளைக் கட்டுக்குள் கொண்டு வரவில்லை. இயக்குநர் வந்த பிறகும் தொடரும் என்பதில் ஐயமில்லை.
கல்வித்துறையின் ஒவ்வொரு நகர்விற்கும் தாங்கள் தான் காரணம் என்று செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு பரப்பி வரும் வேலையையும் செய்கின்றனர். எதற்கெடுத்தாலும் ஆசிரியர்கள் தரப்பிலிருந்து பணம் வசூலிக்கும் வேலைகளைத் தொடர்ந்து செய்வதும் நடக்கிறது.
சமீபத்தில் அமைச்சர்களை அழைத்து பிரம்மாண்டமான முறையில் ஒரு விழாவை முன்னெடுத்துள்ளனர். கல்வியில் எத்தனை சிக்கல்கள் இருக்கின்றன அது குறித்து ஒரு நாளும் தங்கள் அமைப்புகளில் இணைந்திருக்கும் ஆசிரியர்களிடம் உரையாடியதாக எந்தப் பதிவுகளையும் நாம் பார்த்ததில்லை.
இவர்கள் செய்யும் பெரும்பான்மையான வேலைகள் என்பது ஆசிரியர் நலன் சார்ந்து மட்டுமே கோரிக்கை வைப்பது. குறிப்பாக ஓய்வூதியத் திட்டம் CPS என்பதை GPF ஆக மாற்றி விடுவோம் என்று ஆசிரியர்களிடம் சொல்லி சொல்லி நம்ப வைக்கும் வேலை. அது அரசின் முடிவு. செய்யும் காலம் வந்தால் செய்யப் போகின்றனர்.
எப்போதாவது ஓராசிரியர் பள்ளிகள் குறித்து இந்த சங்கங்கள் அரசை நிர்ப்பந்தித்ததா? அதை நோக்கி அரசை சிந்திக்க வைத்திருந்தால் உண்மையாகவே மாணவர்கள் நலன் சார்ந்தும் இயங்குகின்றன என பாராட்டலாம்.
பற்றாக்குறை ஆசிரியர்கள், கழிப்பறைச் பிரச்சினைகள், கட்டிடத் தேவைகள், பாடச்சுமை, பாடத்திட்ட மாறுதல், மனநல ஆலோசகர் நியமனம் இப்படி நீளும் தேவைகள் குறித்து ஆரோக்கியமான விவாதத்தை ஆசிரியர்கள் மத்தியில் முன்னெடுத்துள்ளதா இது போன்ற சங்கங்கள்?
கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள 25% மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கை, நம் எதிர்கால ஆசிரியர் பணியிடங்களைக் கேள்விக்குறியாக்கியதை என்றாவது விவாதித்து இருக்கிறார்களா இந்த சங்க நிர்வாகிகள்? எந்த ஆணியும் பிடுங்காத போது இவர்களெல்லாம் பள்ளிக்குள் இருந்து பாடம் நடத்தும் வேலையை மட்டும் ஒழுங்காக செய்தால் மாணவர்களுக்காவது பிரயோஜனமாக இருக்கும். வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்வதில்லை என்று சமூகத்தின் வாயில் விழும் ஆசிரியர்கள் இது போன்ற சங்கங்களில் தஞ்சமடைந்த சுயநலமிகளே.
சங்க நிர்வாகிகள் போக்கில் விரும்பத்தகாத மாற்றங்கள் நிகழும் போது ஆசிரியர் உறுப்பினர்கள் புத்திமதி சொல்ல வேண்டும். தலைமைகளுக்கு கொம்புகள் முளைத்திருக்கின்றனவா என்ன? ஆனால் புலம்பிக் கொண்டே தங்கள் பலம் என்ன என்று அறியாமல் அமைதி காக்கும் இது போன்ற சங்கங்களில் உறுப்பினர்களாக இணைந்திருக்கும் ஆசிரியர்களும் குற்றவாளிகளே.
எத்தனையோ ஆசிரியர் சங்கங்கள் உண்மையாக தங்கள் கோரிக்கைகளை வைத்து அரசிடம் நியாயமான முறையில் பேசிவருகின்றன. அந்தக் கோரிக்கைகள் அரசாலும்/கல்வித்துறையாலும் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் ஆர்ப்பாட்டம் செய்யாமல் அவரவர் பணிகளைச் செய்து வருகின்றனர்.
ஆனால் எந்த அறிவிப்பு வந்தாலும் ஒரு குறிப்பிட்ட சங்கத்தைச் சேர்ந்த தலைமையால் மட்டுமே கல்வித்துறை ஆணையர் செய்தார் என்று கடந்த காலங்களில் செய்தி வெளியிடுவதும் தற்போது இயக்குநர் இவர் பேச்சைக் கேட்பதும் என்று செய்தி வருவது கல்வித்துறைக்கு இழுக்கு.
நேற்று வெளியான ஆசிரியர்களுக்கான பயிற்சி (CRC-CPD) ரத்து என்பது வரை இது தொடர்கிறது. இது போன்ற பரப்புரைகளைக் கல்வித்துறை இயக்குநர் கண்டிக்க வேண்டும்
கல்வித்துறைக்கும் பொறுப்பிருக்கிறது அல்லவா? இயக்குநர் உள்ளிட்ட அங்குள்ள உயர் அதிகாரிகளும் முடிவு செய்துதானே சுற்றறிக்கைகள் வெளிவருகின்றன. இடையில் இவர்களைப் போன்ற இடைச்செருகல்கள் எதற்கு? யார் தலையிட்டாலும் அரசின் கொள்கை நிலைப்பாடு என்று ஒன்றிருக்கிறது. கல்வித்துறையின் பணிகள் தானாக நடைபெறும். அவற்றை விடுத்து பள்ளி வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாமல் கல்வித்துறையின் பணிகளின் போக்கைக் கட்டுப்படுத்துவது போல படம் காட்டும் விளம்பரப் பிரியர்களை கல்வித் துறை கண்டிக்க வேண்டும்.
பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களை நடுங்க வைக்கும் பணியை இந்தக் குறிப்பிட்ட சில சங்கங்களின் உறுப்பினர்களாக இருக்கும் ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். பெண் ஆசிரியர்களை அடக்கி, அடிமைகளாக நடத்தும் வேலையையும் சில சங்க உறுப்பினர்கள் செய்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் சில மாவட்டங்களிலிருந்து வருகின்றன.
சில மாவட்டங்களில் அதிகாரிகளையே பணிசெய்ய விடாமல் அடக்கி வைக்கும் வேலைகளைச் செய்து வருகின்றனர். எத்தனை SMC வந்தாலும் இது போன்ற சங்க ஆசிரியர்களை பள்ளிகளில் பணிசெய்து வைத்துவிட முடியுமா?
முதல்வர் அவர்கள், கல்வித்துறை அமைச்சர் அவர்கள், ஆசிரியர் சங்கங்களின் இந்தப் போக்கை சரிசெய்ய வேண்டும். உங்கள் இருவருடனும் படங்கள் எடுத்து எடுத்து குழுக்களில் போடுவதால் ஏதோ இவர்களை அரசியல்வாதியாகவே எண்ணிக் கொண்டாடும் சிந்தையற்ற ஆசிரியர்கள் கூட்டம் ஒருபுறம்.
இவர்களின் இந்தப் போக்கைக் கண்டு மனதால் வருந்தும் உண்மையான சங்கத் தலைமைகள், களப் போராளிகள், சங்க உறுப்பினர்கள் ஒருபுறம். ஆசிரியர்கள் சங்கங்களுக்கு என்று ஒரு வரலாறு உண்டு. அதைக் கறைப்படுத்தும் வேலைகளை இது போன்ற சங்கங்கள் செய்து வருகின்றன.
வரும் கல்வியாண்டிலாவது இது போன்ற சங்கங்கள் களைகளாகக் கருதி , அவற்றைப் பிடுங்கிட வேண்டும் கல்வித்துறை. உரிமைகளுக்காகப் போராடும் அதே வேளையில் கடமைகளை சரிவர செய்யும் சங்கங்களாக மட்டும் இயங்க வேண்டும் என்று எச்சரிக்கை தர வேண்டும். பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மாவட்டக்கல்வி அதிகாரிகள் இவர்களின் பணிக்கு இடையூறு இல்லாமல் சக ஆசிரியர்களைப் போல பணியாற்ற அறிவுறுத்த வேண்டும். அப்போது தான் உண்மையான கல்வியை குழந்தைகளுக்கு எடுத்துச் செல்லும் கல்வித்துறையாக விளங்க முடியும் என்று லட்சக்கணக்கான குழந்தைகள் , பெற்றோர்கள் , நேர்மையாகப் பணியாற்றும் ஆசிரியர்கள் , சார்பாக கல்வித் துறைக்கு கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு பகிரப்பட்டு வருகிறது.