பெண் ஆசிரியைகளுக்கு தொலைதூரத்தில் தேர்தல் பணி வழங்கப்பட்டதற்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடியில் தலைமை பதிவு வாக்குப்பதிவு அலுவலர் முதல் அனைத்து நிலை வாக்குப்பதிவு அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே பணியாற்ற உள்ளனர்.
80 சதவீதத்திற்கும் மேல் ஆசிரியைகள் என்பதால் அவரவர் பணியாற்றும் தொகுதிகளிலேயே தேர்தல் பணி வழங்கப்படும் என கூறப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு முதல்கட்ட பயிற்சி மார்ச் 13, இரண்டாம் கட்ட பயிற்சி 26ம் தேதியும் நடந்தது. இரண்டாவது கட்ட தொடர் பயிற்சி ஏப்ரல் 1ம் தேதியும் நடந்தது. இன்று அவர்கள் தேர்தல் பணியாற்றும் சட்டமன்ற தொகுதியிலேயே பயிற்சி நடத்தப்பட்டு, அங்கிருந்து நேரடியாக வாக்குச்சாவடிகளுக்கு செல்கின்றனர்.
தற்போது பெண் ஆசிரியர்களுக்கு சுமார் 60 கி.மீ தொலைவில் தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது, தேவகோட்டை, சாக்கோட்டை வட்டாரங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் திருப்புவனத்திற்கும், எஸ்.புதூர் மற்றும் காளையார்கோயில் ஒன்றிய ஆசிரியர்கள் காரைக்குடி தொகுதிக்கும், மானாமதுரை, சிவகங்கை ஆசிரியர்கள் திருப்பத்தூர் தொகுதிக்கும் எஞ்சிய ஆசிரியர்கள் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பணியிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இது ஆசிரியர் பணியாற்றும் தொகுதியிலேயே பணியமர்த்தப்படுவர் என தேர்தல் ஆணையம் அளித்த உறுதிமொழிக்கு எதிரானதாகும் என பெண் ஆசிரியைகள் புலம்பினர். இதனால் பயிற்சி மற்றும் தேர்தல் பணிக்கு செல்லும் பெண் ஆசிரியர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தொடர்ச்சியாக ஒவ்வொரு தேர்தலிலும் இதுபோல் செய்கின்றனர்.
போதிய போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிக்கு செல்வதற்கு பெண் ஆசிரியர்கள், ஊழியர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.