கொரோனா பேரிடர் நிதிக்காக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தை தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு பிடித்தம் செய்ய தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவன தலைவர் சா.அருணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா இரண்டாம் அலை கொடுந்தொற்று அதிக அளவில் பரவும் சூழ்நிலையில் இதனை கட்டுப்படுத்தும் விதமாக 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஊரடங்கு காலத்தில் தமிழக மக்கள் துயரப்படக்கூடாது என்பதற்காக, தேர்தல் அறிக்கையில், திமுக தலைவர் அறிவித்தபடி ரூபாய் நான்கு ஆயிரத்தில், முதல் தவணையாக ரூபாய் இரண்டாயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மிகவும் வரவேற்புக்குரியது. மேலும், இது மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருப்பதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில், அரசிற்கு வலு சேர்க்கும் வகையிலும், உதவிடும் வகையிலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தை முதல்வர் நிவாரண நிதிக்காக பிடித்தம் செய்ய வேண்டும். இது கொரோன பணிக்கு ஒரு சிறு உதவியாக இருக்கும். அதேபோன்று துறை சார்ந்த நியமனம், பணி மாறுதல்களில் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்களுக்கு உத்தரவிட்டருப்பது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் காவலர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மறு உருவம் என்பதை தமிழக முதல்வர் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் நல்லாட்சி தருவார் என்பதற்கான முன்னோட்டம் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. இவ்வாறு, அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.