தமிழ் புதல்வன் திட்டம் என்றால் என்ன
அரசாணை எண் 46, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை 2.8.2022 நாளின் படி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் (புதுமைப் பெண் திட்டம்) –-ன்படி, 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று இந்திய அரசு, தமிழ்நாடு, பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு, உயர்கல்வி பயிலும் வரை மாதந்தோறும் ரூ1000 வழங்கப்படுகிறது. பின்னர், இந்த இந்த திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது. இதேபோன்று, அரசு பள்ளிகளில் பயின்ற, ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில், அரசு பள்ளி மாணவரின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் தமிழ்ப் புதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று 2024-2025ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தெரிவித்தார். அதன்படி, இந்த திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் ஆகஸ்ட் 9,2024 அன்று துவக்கி வைக்க உள்ளார்.
அதன்படி இந்த திட்டத்தின்கீழ் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்கள் பாடப்புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி படித்து பயன்பெறும் வகையில், மாதந்தோறும் ரூ ஆயிரம் வழங்கப்படும். இந்த பணம் நேரடியாகவே அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்திற்கு ரூ360 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Read Also: அறிவோம் புதுமை பெண் திட்டம்தமிழ் புதல்வன் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்
மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க பிரத்தேயகமான விண்ணப்பப் படிவம் ஒன்று வடிவமைக்கப்பட்டு, நிகழ்நிலையில் (ஆன்லைன்) ஏற்றப்படும். விண்ணப்ப படிவத்தில் அளித்துள்ள ஆதாா் எண்ணை சார்ந்த கல்லூரியிலிருந்து பள்ளி கல்வித்துறையின் எமிஸ் மூலம் சரிபார்ப்பு செய்து, அம்மாணவன் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்றதை உறுதிப்படுத்தப்படும். பின்னர் இந்த விவரம் உயர்கல்வித்துறைக்கு அனுப்பி, மாணவனுக்கு தனிப்பட்ட எண் வழங்கப்படும். மாணவரால் பதிவு செய்யப்பட்ட அலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பி, அதன் நிலையினை அறிந்து UMIS முகப்பு இணையம் மூலம் விண்ணப்பிக்கப்படும்.
தமிழ் புதல்வன் திட்டம் தகுதிகள்
வருமான உச்ச வரம்பு, இனம் மற்றும் ஒதுக்கீடு ஆகிய எந்தவொரு பாகுபாடி இன்றி 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழி பயின்ற மாணவர்கள், தமிழகத்தில் உள்ள எவ்வித கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவராக இருத்தல் வேண்டும். மேலும், மாணவர் பயிலும் நிறுவனம் மற்றும் பாடப்பிரிவு அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
அரசு பள்ளிகளிலும் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் 8ஆம் வகுப்பு அல்லது 9ஆம் வகுப்பு அல்லது 10ஆம் வகுப்பு வரை பயின்று தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களும் இத்திட்டம் மூலம் பயன்பெறலாம். தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு இளங்கலை பட்டம், தொழிற்சார் படிப்புகளில் சேர்க்கையில் முன்னுரிமை வழங்குதல் சட்டம் 2021ல் குறிப்பிட்டுள்ளவாறு, அரசு பள்ளி என்பது அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் மற்றும் கல்விக்கான அடிப்படை உரிமை சட்டத்தின் கீழ் கல்வி பெறும் மாணவர்கள் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் நடத்தப்படும் அரசு சேவை இல்லங்கள், அரசு குழந்தைகள் காப்பகங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது.
உயர்கல்வி என்பது கலை மற்றும் அறிவியல், தொழிற்சார் படிப்புகள், இணை மருத்துவம் சார்ந்த படிப்புகள், பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி மற்றும் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு போன்றவற்றை உள்ளடக்கியது. தொலைதூர மற்றும் அஞ்சல் வழியிலும், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெற இயலாது.
மற்ற மாநில மாணவர்கள் இத்திட்டத்திற்கு தகுதி அற்றவர்களாக கருதப்படுவர்.ஒரே குடும்பத்திலிருந்து எத்தனை மாணவர்கள் தகுதி பெற்றிருப்பினும், அனைவரும் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்க முடியும்.
அரசு பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவிெபறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று கலை மற்றும் அறிவியல் பிரிவு (3 ஆண்டு படிப்பு), பொறியியல் பிரிவு (4ஆண்டு படிப்பு) மருத்துவ படிப்பு (5ஆண்டு படிப்பு), சட்டம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இணையான கல்வி (3-4 ஆண்டுகள்) மற்றும் இதர கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ1000 வழங்கப்படும். ஒருங்கிணைக்கப்பட்ட பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் இத்திட்டத்தின்கீழ் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் ஒருங்கிணைந்த துறைகள் எவை
- உயர் கல்வித்துறை
- பள்ளிக் கல்வித்துறை
- தொழில்நுட்பக் கல்வித்துறை
- தகவல் தொழில்நுட்பத்துறை
- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை தொகை
- கருவூலக் கணக்கு துறை
- தமிழ்நாடு மின் ஆளுமை முகமை,
- அனைத்து பல்கலைக்கழகங்கள்,
- முன்னணி வங்கி/ மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு