ஒன்பது மாத நீண்ட இடைவெளிக்கு பின், பள்ளிகள் செவ்வாயன்று திறக்கப்படுகிறது. முதல் கட்டமாக பொதுதேர்வு எழுதும் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் நேரடி வகுப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக செய்திகள் வெளியாகிறது.
இந்த நிலையில், மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல உள்ளனர். இவர்கள், பள்ளியில் என்னென்ன நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என விரிவாக பார்க்கலாம். கொரோனா தொற்று காலம் என்பதால், மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் தங்கள் உடல்நலத்தை பாதுகாக்க வேண்டும், அதனால் நன்றாக கழுவப்பட்ட பாட்டிலில் குடிநீர் மற்றும் உணவு வீட்டில் இருந்தே கொண்டு செல்ல வேண்டும். தரமான, சுத்தமான முக கவசம் அணிந்து, பள்ளிக்கு செல்ல வேண்டும். நண்பர்கள் மத்தியில் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், நண்பர்களுடன் கை குலுக்குதல், தொட்டு பேசுதல் தவிர்க்க வேண்டும். திண்பண்டம் அல்லது மதிய உணவு, குடிநீர் பகிர வேண்டாம், இது தற்காலிகமானதே. ஒரு வகுப்பறைக்கு 25 பேர் மட்டுமே அமர அனுமதிக்கப்படுகிறார்கள். சிறப்பு வகுப்புகள், மாலை நேர வகுப்புகள் தடை செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் நுழைந்தவுடன், பள்ளி நுழைவாயில் கதவு மூடப்படும், முக்கிய காரணங்கள் தவிர, மாணவர்கள் வெளியே அனுமதிக்கப்பட மாட்டார்கள். விட்டமின், ஜிங்க் மாத்திரைகள் வகுப்பு ஆசிரியர்கள் மூலம் விநியோகிக்கப்பட உள்ளது. காலை வழிபாட்டு கூடம், விளையாட்டு உள்ளிட்டவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முடிந்த அளவிற்கு பேருந்து பயணத்தை தவிர்த்து, பெற்றோர் உடன் வாகனத்தில் செல்ல முயற்சி மேற்கொள்ள வேண்டும் அல்லது சைக்கிள் பயன்படுத்துவது சிறந்தது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை 4.15 மணிக்கும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை 4.30 மணிக்கும் பள்ளி முடிவடையும் நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்நாளான செவ்வாய் கிழமை, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மறவாமல், பெற்றோரை உடன் அழைத்து செல்ல வேண்டும், ஆசிாியா் கூறும் அறிவுரைகளை கவனமாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக, பெற்றோர் பாதுகாவலரின் ஒப்புதல் கடிதம் பூர்த்தி செய்யப்பட்டு, பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கப்பட வேண்டும். இரண்டாவதாக, மாணவர் உடல்நலம் தொகுப்பு படிவம் பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும். சந்தேகம் ஏற்பட்டால், வகுப்பு ஆசிரியரிடம் கேட்கலாம். பள்ளி கல்வித்துறை கூறிய அறிவுரைகளை பின்பற்றி கொரோனா பாதிப்பில் இருந்து விலகியிருப்போம். பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு TN Education Info - வின் வாழ்த்துகள்.