சொற்ப ஊதியத்தால், தற்காலிக ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில், மாணவர்கள் கல்வி நலன் கருதி, சுமார் 2300 அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி பிரிவுகள் தொடங்கப்பட்டன. மழலையர் பிரிவுகளை கையாள தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, சுமார் 5000 பேர் தற்காலிக அடிப்படையில் மாநிலம் முழுவதும் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர். சமூக நலத்துறையின் நிர்வாகத்தின் கீழ் இப்பள்ளிகள் செயல்பட்டாலும், ஒருங்கிணைந்த மாநில கல்வி திட்டத்தின் கீழ் (சமக்கிர சிக்ஷா) மூலம் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் அவர்கள் மாத சம்பளமாக ரூ 5000 ஆயிரம் மட்டுமே பெறுகின்றனர். ஒரு சில பள்ளிகளில் அதற்கு குறைவான, சம்பளமே வழங்கப்படுகிறது என அவர்கள் புலம்புகின்றனர். ஆசிரியர் ஒருவர் கூறும்போது, விலைவாசி விண்ணை முட்டும் அளவில் இருக்கும்போது, குறைந்த சம்பளம் எங்கள் வாழ்வாதாரத்தை அடியோடு பாதித்துள்ளது. எவ்வித ஊதிய உயர்வு இல்லாமல் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். பல முறை முறையிட்டும், எவ்வித நடவடிக்கை இல்லை. எனவே முதலமைச்சர் குறைந்தபட்ச ஊதியமாக ரூ 10 ஆயிரம் வழங்க வேண்டும், என்றார்.மேலும் அவா் கூறும்போது, எல்கேஜி, யுகேஜி பிரிவுக்கான பாடத்திட்டத்தை வெளியிட வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது.