கற்றல் விளைவு பயிற்சி – கொரோனா பீதியால் அரசு பள்ளி ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். அவர்கள் பயிற்சியை தற்காலிமாக ஒத்திவைக்க வேண்டும் அல்லது ஆன்லைன் முறையில் பயிற்சியை நடத்த வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில வாரமாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாகி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, மாணவர்கள் நலன் கருதி, பள்ளி, கல்லூரிகள் தற்போது மூடப்பட்டுள்ளன, அதே சமயத்தில் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும், ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கற்றல் விளைவு பயிற்சி
இருந்தபோதிலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் எனவும், வழக்கமான பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்திய நிலையில், ஒருங்கிணைந்த கல்வி திட்டம் மூலம் ஆசிரியர்கள் கற்பித்தல் திறனை மேம்படுத்த கற்றல் விளைவு பயிற்சி பாடம் வாரியாக அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த பயிற்சி தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு கட்டமாக கருத்தாளர்கள் மூலமாக அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பயிற்சி மாவட்டங்களில் உள்ள உயர் நிலைப்பள்ளி ஹெடெக் ஆய்வகத்தில் தற்போது நடந்து வருகிறது.
கற்றல் விளைவு பயிற்சி - கொரோனா அச்சம்
மேலும் ஆசிரியர்கள் கூறும்போது, ஆய்வகத்தில் இருபது பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று கல்வித்துறை கூறுகிறது. பெரும்பாலான பயிற்சி மையங்களில் 30க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் அமர வைக்கப்படுகிறார்கள். சமூக இடைவெளி ஆசிரியர்கள் மத்தியில் கேள்விக்குறியாகி உள்ளது.
இதுதவிர, அதிகாரிகள் கட்டாயத்தின் பேரில், சிலர் சளி, இருமல் போன்ற அறிகுறிகள்ள இருந்தாலும் சிலர் பயிற்சியில் பங்கேற்கிறார்கள். இது சக ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பயிற்சியில் பங்கேற்ற பிறகு, ஓரு சில ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, கடந்த தேர்தல் பயிற்சி போது, இதே சூழல் நிலவியது. சில ஆசிரியர்கள் தொற்று பாதிக்கப்பட்டு மரணித்துள்ளனர். கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும்போது, இதுபோன்ற பயிற்சிகள் கட்டாயமாக நடத்துவது, ஆசிரியர்கள் மத்தியில் கொரோனா அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர்கள் நலன் கருதி இந்த பயிற்சியை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும் என்று,
ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும், உயரதிகாரிகள் கள எதார்த்தம், சூழல் ஆகியவை கருத்தில் கொண்டு பயிற்சிகளை நடத்த வேண்டும் மற்றும் சில இடங்களில் பயிற்சி முறையாக நடத்தவில்லை என்றும்
அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கற்றல் விளைவு பயிற்சி ஒத்திவைக்க வேண்டும்
ஐபெட்டோ சார்பிலும் பயிற்சியை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த விவகாரத்தில் அதிகாரிகள் சரியான முடிவு எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.