தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு, சா.அருணன், நிறுவனத் தலைவர், இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உயர் மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக பதவி உயர்வு கலந்தாய்வை பள்ளிக்கல்வித்துறை நடத்தவில்லை. தற்போது நடத்த உத்தேசித்து அதற்கான பதவி மூப்பு பட்டியலை தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு ஓரிரு பாட பிரிவிற்கான பெயர் பட்டியலை வெளியிட்ட நிலையில், தற்போது தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருப்பதாக அறியப்படுகிறது. ஏற்கனவே, ஆறு ஆண்டுகள் காத்திருந்து தற்போதும் தள்ளி வைத்திருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசும் பள்ளி கல்வித்துறையும் அவர்களின் நியாயத்தை உணர்ந்து உடனே இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வை காலம் தாழ்த்தாமல் உடனே நடத்த வேண்டும். அதேபோன்று, மேல்நிலை மற்றும் தொடக்க கல்வித்துறைகளில் இந்த ஆண்டு பொது இட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. எப்போதும் பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு பின்னரே பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவது வழக்கம். இதனையும், நினைவில்கொண்டு பொது இடமாறுதல் கலந்தாய்வை முதலில் நடத்திவிட்டு, பின்பு பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு, முதுநிலை பட்டதாரி ஆசிரியர், மற்றும் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தவேண்டும். அமைச்சு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதை வரவேற்கின்றோம். அதே சமயம், நேரடியாக முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு அளிப்பதால் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது, அவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கினால் அவர்களுக்கு பெருமளவில் சிரமம் இருக்காது. தேர்தல் அறிவிப்பிற்கு முன் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த தமிழக அரசையும் பள்ளிக்கல்வித்துறையும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.