Tamil Nadu State Education Policy Latest News | தயார் நிலையில் மாநில கல்வி கொள்கை
Tamil Nadu State Education Policy Latest News
மாநில கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கை தயாராகியுள்ள நிலையில் , தற்போது அதனை மொழிபெயர்ப்பது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்துக்கு பிரத்யேக கல்விகொள்கை உருவாக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. இந்த கல்வி கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதன்படி மாநில கல்வி கொள்கை வடிவமைப்பு தொடர்பாக இந்த குழுவினர் ஏற்கனவே பல்கலை. துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை கேட்டறிந்தனா்.
இதையடுத்து கல்விக்கொள்கைக்கான பரிந்துரைகள் அடங்கிய வரைவறிக்கை தயாரிக்கும் பணிகளில் குழுவினர் ஈடுபட்டனர். அனைத்து பணிகளையும் முடித்து ஜூன் மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அறிக்கை தயாரிப்பு முடிவடையாததால் இந்த குழுவுக்கு செப்டம்பர் மாதம் வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி மாநில கல்வி கொள்கை குழுவினர் தமிழக அரசிடம் சமர்ப்பிப்பதற்கான வரைவு அறிக்கையை தற்போது தயார் செய்துள்ளனர்.
Read Also: ஜவஹா் நேசன் மாநில கல்வி குழுவில் இருந்து விலகல்
இந்த நிலையில் மாநில கல்விகொள்கை வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் பெறுவதற்கான குழு உறுப்பினா்கள் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடந்தது. குழு தலைவர் முருகேசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் 12 உறுப்பினர்கள் கலந்துகொண்டதாகவும், அறிக்கையில் இ்டம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் மாநில கல்வி கொள்கையின் வரைவு அறிக்கைக்கு குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக தொியவந்துள்ளது.
இதையடுத்து அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்தல் உள்ளிட்ட அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அவை நிறைவு பெற்றதும், அடுத்த மாதத்துக்குள் வரைவறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.