கோவிட் 19 நோய்த் தொற்று தொடரும் சூழலில் பள்ளிகளைத் திறப்பதற்கு முன் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை என்னென்ன கட்டயமாக செய்ய வேண்டிய கடமைகள் குறித்து, கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர், சு.மூர்த்தி தனது பார்வையில் விவரித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுப்பதில் அரசு சிக்கலை எதிர்கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே. பெற்றோர்களும் குழந்தைகளின் கல்விப் பாதிப்பு குறித்து பெரும் கவலை கொண்டுள்ளனர். பள்ளிகளைத் திறக்க அரசு முடிவெடுக்கும் முன்பாக பள்ளிகளில் படிக்கும் மாணவர் எண்ணிக்கை சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க ஏற்றதாக அமையும் வகையில் கீழ்க்கண்ட சில மாற்றங்களைச் செய்யவேண்டும்.
1. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் ஒரு வகுப்பறையில் 10 மாணவர்களுக்கு மேல் அமரவைக்க அனுமதிக்கக் கூடாது. தொடக்கப் பள்ளிகளில்
200 மாணவர்களுக்கு மிகாமலும் நடுநிலைப் பள்ளிகளிகளில்
300 மாணவர்களுக்கு மிகாமலும் உயர்நிலைப்பள்ளிகளில்
400 மாணவர்களுக்கு மிகாமலும் மேல்நிலைப் பள்ளிகளில்
600 மாணவர்களுக்கு மிகாமலும் மாணவர் எண்ணிக்கை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
2. அரசு, தனியார்பள்ளி எதுவாக இருந்தாலும் ஒரு பள்ளி வளாகத்தில்
600 மாணவர்கள் என்ற அளவிற்குள் மட்டுமே மாணவர் எண்ணிக்கையை அனுமதிக்கவேண்டும்.
3. தனியார் பள்ளி வாகன இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதும் அவசியமானது. பள்ளி வாகனங்களில் குழந்தைகளை அழைத்துச் செல்வதில்
சமூக இடைவெளியைப் பின்பற்றுவதற்கான வழிமுறைகளை உருவாக்கவேண்டும்.
4. ஒவ்வொரு பள்ளிக்குமான சேர்க்கைப் பகுதி எல்லை வரையறை செய்யவேண்டும். மழலையர் பள்ளிகளுக்கு ஒரு கிலோமீட்டர், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு 3 கிலோமீட்டர், உயர்நிலைப் பள்ளிகளுக்கு 5 கிலோமீட்டர், மேல்நிலைப் பள்ளிகளுக்கு 8 கிலோமீட்டர் என்ற வகையில் மாணவர் சேர்க்கைப் பகுதி எல்லை வரையறுப்பது அவசியமானது.
5. தனியார் பள்ளி வாகனங்கள் மூலம் ஒரு பள்ளிக்குரிய மாணவர் சேர்க்கைப் பகுதியில் இருந்து வேறு பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதைத் தடை செய்யவேண்டும். விதிமுறைகளை மீறும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படவேண்டும்.
6. பள்ளி வளாகங்களில் உள்ள வகுப்பறைகள் மட்டுமல்லாமல் கழிப்பறைகளும் மிகமிகத் தூய்மையாகவும் சமூக இடைவெளியுடன் பயன்படுத்தும் வகையிலும் பராமரிக்கப்படவேண்டும்.
7. மாதம் ஒரு முறை பள்ளிக் குழந்தைகளுக்கு
மருத்துவப் பரிசோதனை பள்ளிகளிலேயே நடத்தவேண்டும்.
8. பள்ளிக் குழந்தைகளுக்குப் போதுமான ஊட்டச் சத்து கிடைக்கவும் நோய் எதிர்ப்பாற்றல் வளரவும் பள்ளிச் சத்துணவின் தரத்தை அதிகரிக்கவேண்டும். சத்துணவு மானியத்தை இரட்டிப்பாக்க வேண்டும். பள்ளியில் காலைச் சிற்றுண்டியும் வழங்க வேண்டும்.
கோவிட் 19 தொற்று நோய்ப் பரவல் ஆபத்து தொடரும் சூழலில் பள்ளி குழந்தைகளின் கல்வி மற்றும் உயிர்ப் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு அனைத்துப் பள்ளிகளிலும் சமூக இடைவெளியைப் பின்பற்ற மேற்குறிப்பிட்ட நெறிமுறைகள் மிக அவசியமானது.
எனவே, தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முன்பாக பள்ளி மாணவர் சேர்க்கை எண்ணிக்கை மற்றும் சேர்க்கை எல்லை தொடர்பான நெறிமுறைகளை உருவாக்கி உறுதியுடன் நடைமுறைப்படுத்த வேண்டும்.