பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பா, பின்பா என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கூறினார். ஈரோடு மாவட்டம், கோபியில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது, விளாங்கோம்பை மலைவாழ் கிராமத்தில் அரசு சார்பில் பள்ளி திறப்பது சிரமமாக உள்ளது. வனத்துறை மூலமாக பள்ளி திறக்கப்பட்டு, ஆசிரியர்கள் அங்கேயே தங்கி பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தலை பொறுத்தவரை, அனைத்து கட்சி கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்பதான், தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பாடம் நடத்த போதிய கால அவகாசம் இல்லாத நிலையில், ஆசிரியர்கள் மனித நேயத்தோடு, தங்கள் குழந்தைகள் போல் பாடம் நடத்த வேண்டும். 1 முதல் 8ம் வகுப்பு வரை தேர்வு வைக்கப்படுமா? அல்லது அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்படுமா? என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் நிரந்தரமாக்குவது எளிதான காரியம் அல்ல. தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றுவிடுவார்கள். இப்போதே பல வழக்குகள் உள்ளன. நாடு முழுவதும் 92 சதவீத கற்றல் திறனை இழந்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தமிழகம் பொறுத்தவரை, மாணவர்களின் கற்றல்திறன் ஓரளவு சிறப்பாக உள்ளது. 12 தொலைக்காட்சிகள் வழியாக பாடம் நடத்துவதால் மாணவர்கள் கற்று வருகின்றனர். எத்தனை மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுவார்கள் என 24ம் தேதி தெரியவரும். 20 மாணவர்கள் இருந்தாலே அங்கு தேர்வு மையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 98 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். தமிழகத்தில் இடைநிற்றல் இல்லை. மாணவர்கள் எண்ணிக்கை கூடுதலாகவே உள்ளது, இவ்வாறு அமைச்சர் கூறினார்.