பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி, சென்னையில் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பள்ளி கல்வித்துறை பகுதிநேர ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் எனவும், இந்த சான்றிதழ் சரிபார்ப்பின்போது, அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தங்களின் போராட்டத்தை ஒடுக்கவே, தமிழக அரசு இந்த அவசர முடிவு எடுத்திருப்பதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பகுதிநேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து, பல்வேறு நிலைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசு பகுதிநேர ஆசிாியர்கள் ஊதியத்தை ரூ.பத்து ஆயிரமாக உயர்த்தியது, மேலும் மூன்று அரை நாட்கள் பணியை, முழு நேரமாக மாற்றி உத்தரவிட்டது. முழு நேரமாக மாற்றியதற்கு, பகுதிநேர ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இரண்டு நாட்களிலேயே பழைய நடைமுறை தொடரும் என பள்ளி கல்வித்துறை சூசகமாக தெரிவித்தது. இந்த நிலையில், பணி நிரந்தரம் கோரி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளகத்தில் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். பகுதிநேர ஆசிரியர் ஒருவர் கூறுகையில், நீண்ட காலமாக குறைந்த சம்பளம் பெற்றுக்கொண்டு குடும்பத்தை நடத்துவது மிக கடினமாக உள்ளது. சில பகுதிநேர ஆசிரியர்கள், வாரம் மூன்று நாட்கள் தவிர, பிற வேலைகளுக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர். இதனால், நாங்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம். எங்களது கோரிக்கை நியாமான சம்பளத்தில் பணி நிரந்தரம் மட்டுமே. ஆனால், அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதே ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் அரசுக்கு பக்கபலமாக நின்றது இதே பகுதிநேர ஆசிரியர்கள்தான். ஆனால், எங்களை மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடம் தமிழக அரசு பாவித்து வருகிறது. இது எங்களுக்கு மன வருத்தத்தை அளிக்கிறது. தமிழக அரசு நினைத்தால், எங்களை பணி நிரந்தரம் செய்ய முடியும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்களது கோரிக்கை நிறைவேற்றுவார் என நம்பிக்கை உள்ளது. மற்றொரு பகுதி நேர ஆசிரியர் கூறுகையில், பகுதிநேர ஆசிரியர்கள் புதன்கிழமை தங்களது சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும் எனவும், சான்றிதழ் சாரிபாா்ப்பு பணி நடக்கும் எனவும் முதன்மை கல்வி அலுவலர்கள் கூறியுள்ளதாக பல்வேறு மாவட்டத்தில் இருந்து தகவல்கள் வந்துள்ளது. இந்த போராட்டத்தை நீர்த்துபோகச் செய்யவே பள்ளி கல்வித்துறை முடிவு எடுத்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம். ஒரு நல்ல முடிவு தமிழக அரசு அறிவிக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.