கட்டாய கல்வி உரிைமச்சட்டமான, ஆர்டிஇ மாணவர் சேர்க்கையை பள்ளிகளில் முறையாக அமல்படுத்தக்கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் அதன் தலைவர் ஈஸ்வரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
மனுமீதான விசாரணை நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது, விசாரணைக்கு பின், பள்ளி கல்வித்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். ஈஸ்வரன் கூறியதாவது, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், தமிழக அரசின் விதிகள் தெளிவாக இல்லாத காரணத்தால் விண்ணப்பிக்கும் பெற்றோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். விண்ணப்பிக்கும்போது, வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகள் இணையதளத்தில் காட்டப்படுகின்றன. ஆனால், பல இடங்களில் இது குழப்பமாக உள்ளது. இணையதளத்தில் காட்டப்படும் பள்ளிகளை தவிர, வேறு அருகில் உள்ள பள்ளிகள் காட்டப்படாததால் பொதுமக்களால் விண்ணப்பிக் முடியவில்லை. அனைத்து பள்ளிகளிலும் உள்ள இடங்கள் பூர்த்தியாகும் வகையில், தெளிவான வசிப்பிடத் தொலைவு விதிகள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். பல மாநிலங்களில் சிபிஎஸ்இ - ஐசிஎஸ்இ பள்ளிகளையும் அந்தந்த மாநில அரசுகளின் சேர்க்கை இணையதளத்தில் சேர்த்து, அந்த பள்ளிகளிலும் சேர்க்கப்படுகின்றனர்.அதனால், தமிழகத்திலும் அந்த பள்ளிகளை இணையதளத்தில் சேர்த்து, மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம். விசாரித்த நீதிபதிகள், ஆந்திர அரசை போல தமிழக அரசும் ஏன் விதிகளை பின்பற்றக்கூடாது என கேள்வியை எழுப்பினார்.ஜூன் 4ம் தேதி இதற்கு பதிலளிக்குமாறு, தமிழக அரசு பள்ளி கல்வித்துறைக்கு நேற்று உத்தரவிட்டனர்.