You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

பிளஸ் 2 பொதுத்தேர்வு 2025 நாளை துவக்கம் – கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

Tiruppur hm suspend

இந்த ஆண்டுக்கான பிளஸ்2 பொதுத் தேர்வு தமிழகத்தில் திங்கள்கிழமை (மார்ச் 3) தொடங்கி மார்ச் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை சுமார் 8 லட்சம் பேர் எழுத உள்ளனர். 

முதல் நாளில் தமிழ் உள்பட மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,316 தேர்வு மையங்களில் 8,21,057 பேர் எழுதவுள்ளனர். இதில், 7,518 பள்ளிகளில் இருந்து 8,02,568 மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் அடங்குவர்.

பொதுத் தேர்வுக்கான அறைக் கண்காணிப்பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும், முறைகேடுகளை தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.

அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

விடைத்தாள்களில் எவ்வித சிறப்பு குறியீடு, தேர்வெண், பெயர் ஆகியவற்றை குறிப்பிடக்கூடாது. மாணவர் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாண வர்கள் கையொப்பமிட்டால் போதும். அறைக் கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும்.

முறைகேட்டில் ஈடுபட்டால்...! 

பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத் தாள் அல்லது பிற மாணவர்களைப் பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அந்த மாணவர் மீது விதிகனின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடைவிதிக்கப்படும்.

பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க பள்ளிக்கல்வித் துறையின் 14417 இலவச உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று தேர்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டு அறை: 

தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாணவர்கள், அவர்களின் பெற்றோரும் தேர்வு தொடர்பான சந்தேகங்களையும் கேள்விகளையும் தெரிவித்து விளக்கம் பெற தனியாகக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த அறையை 94983 83075, 94983 83076 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். 

என்னென்ன கட்டுப்பாடுகள்: தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க தேர்வர்களுக்கு கட்டுப் பாடுகள் விடுக்கப்பட்டுள்ளன. தேர்வு மையவளாகத்துக்குள் கைப்பேசியை எடுத்து வர முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வு பணியின்போது, தேர்வு அறையில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் அந்தத் தடை பொருந்தும். இதை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ கைப்பேசியை வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் குற்றங்களுக்கு ஏற்றவாறு தண்டனைகள் வழங்கப்படும்.

மேலும், ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளித் தேர்வு மையத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.