நெகிழ்ச்சி சம்பவம்
கொரோனாவால் அனைத்து துறைகளிலும் ஆட்டம் கண்ட நிலையில் கல்வித்துறையின் நிலைமையும் பரிதாபமாகத்தான் உள்ளது. குறிப்பாக ஆன்லைன் தேர்வு, கல்லூரி மாணவர்களை பதம்பார்த்து வருகிறது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பேருந்து நிலைய நடைபாதையில் இளைஞர் ஒருவர் நாளிதழ் பேப்பரை விரித்து, அதன் மேல் அவசர அவசரமாக ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். அவ்வழியாக வந்தவர்கள் மனதில் இவர் அப்படி என்ன எழுதுகிறார்கள் என்ற யோசித்தபடியே அங்கிருந்து நகர்ந்தனர். ஆனால், அந்த இளைஞர் அந்த இடத்தில் பல்கலைக்கழக தேர்வு எழுதி கொண்டிருந்தார் என்பது பலருக்கு தெரியாது. அவருக்கு உதவியாக, தனது கல்லூரி நண்பரும் அங்கு வந்து செல்போன் கொடுத்து உதவியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
விரிவாக பார்ப்போமா,
கருங்கல் அருகில் உள்ள விழுந்தயம்பலத்தை சேர்ந்தவர் ரமேஷ், கூலிதொழிலாளியான மகன் இவர், தந்தை உதவியுடன் மேல்நிலை கல்வி முடித்தார். நண்பர் உதவியுடன், அவர் பி.ஏ தமிழ் பட்ட படிப்பை முடித்தார். எம்.ஏ தமிழ் படிக்க போதிய பொருளாதார வசதி இல்லாததால் மீண்டும் கூலி வேலைக்கு சென்றார். வேலைக்கு சென்ற பணத்தை வைத்து, மீண்டும் எம்.ஏ தமிழ் மேற்படிப்பில் சேர்ந்துள்ளார்.
இந்த படிப்பு முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், முதலமாண்டு முதல் செமஸ்டர் தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தார். அந்த பாடத்தை எழுதி வெற்ற பெற முயற்சித்தபோது கொரோனா காலம் இவருக்கு தடையாக இருந்தது. ஆன்ட்ராய்டு மொபைல் போனும் அவரிடம் கிடையாது.
இந்த நிலையில் அரியர் தேர்வு ஆன்லைன் எழுதலாம் என அறிவிக்கப்பட்டு, அதற்கான தேதியும் வெளியானது. இதுகுறித்து கேள்விப்பட்ட ரமேஷ் தேர்வு கட்டணத்தையும் செலுத்தி உள்ளார். ஆன்லைன் தேர்வு நேற்று நடந்த நிலையில், அதற்காக ஸ்மாாட் போன் மற்றும் இணையதள வசதி தன்னிடம் இல்லாததால் தக்கலை வந்த ரமேஷ், முட்டைக்காடு பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஒருவரை அங்கே வரவழைத்து, நண்பரின் செல்போன் பெற்று வினாத்தாள் பதவிறக்கம் செய்தார். பின்னர் தக்கலை பேருந்து நிலையில் நடைபாதையில் அமர்ந்தபடியே பரபரப்பாக தேர்வு எழுதி கொண்டிருந்தார். பின்னர், அங்கேயே தேர்வு எழுதிய விடைத்தாளை, போட்டோ எடுத்து, பல்கலைக்கழக இணையதளத்திலயே பதிவேற்றம் செய்து வெற்றிகரமாக அரியர் தேர்வு எழுதி முடித்தார். இதில் அவரது நண்பர் பக்கபலமாக அங்கே இருந்து மொபைல் கொடுத்து உதவியது அனைவரும் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நண்பேன்டா...
இறுதியாக ரமேஷ் கூறும் போது, தமிழில் முனைவர் பட்டம் பெறுவதே எனது நோக்கம், என்றார்.