News Update: 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்குப்பின், மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என்று கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளதாக முன்னனி செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தி ஒளிபரப்பியது. இதுகுறித்து கல்வி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அது தவறான செய்தி என்றும், மாணவர் பள்ளி வருகை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் அவர்கள் அறிக்கை
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த்தொற்றில் இருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
2020-21ஆம் கல்வியாண்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை தடுப்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டு, கொரோனா நோய்த் தொற்று ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 19ம் தேதி முதல், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இந்த கல்வியாண்டு முழுவதும் மாணாக்கர்கள் கல்வி தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று வந்தனர். மாணாக்கர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும், கல்வி பயின்று வருவதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.
மேலும், இந்த கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கை கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளை பரிசீலித்தும், 2020-21ஆம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.
மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசினால் விரிவாக வெளியிடப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.