நடிகர் விவேக் காமெடி வசனத்தின்போல்,உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா... என்பது போல் இறந்து போன ஆசிரியைக்கு அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது சக ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தில் மூன்று சட்டமன்ற தொகுதிகளில் பணியாற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டு, நிலை பணிகள் வழங்கப்பட்டது. முன் எப்போது இல்லாத அளவிற்கு நிர்வாகத்தில் குளறுபடி கும்மியடிப்பதாகவும் தேர்தல் பணி ஆணை பெற்றவர்கள் புலம்புகின்றனர்.
குறிப்பாக தேர்தல் அலுவலர் இரண்டாம் நிலை என்பது முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும். இந்த பணிக்கு ஆசிரியர்களை நியமிக்காமல், அங்கன்வாடி பணியாளர்களை நியமித்துள்ளனர். இதனால், வாக்குப் பதிவின்போது சிக்கல்கள் எதிர்கொள்ள நேரிடும் என ஆசிரியர்கள் எச்சரிக்கின்றனர்.
கடந்த 18ம் தேதி நடந்த பயிற்சி வகுப்பில் 250 பேர் பங்கேற்கவில்லை, இவர்கள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த பட்டியலில் வேறு மாவட்டங்களில் பணிமாறுதல் சென்ற ஆசிரியர்கள் பெயர், மருத்துவக்குழு சிபாரிசு செய்த ஆசிரியர்கள் பெயர், உட்சபட்சமாக கொரோனா பாதிப்பால் தனித்து இருப்பவர்கள், பாலூட்டும் தாய்மார்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சி வகுப்பில் ஏன் கலந்துகொள்ளவில்லை என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அடுத்ததாக, தோ்தல் பயிற்சிக்கு முன்னதாக உடல் நல குறைவால் இறந்து போன ஆசிரியைக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இறந்துபோன ஆசிரியையின் பெயர் சரஸ்வதி, இவர் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயரிழந்தார். இவர், நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், தேர்தல் பயிற்சியில் ஏன் கலந்துகொள்ளவில்லை எனக் கூறி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீஸை கண்ட சக ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கு முக்கிய காரணம் கல்வித்துறையிலும், மாவட்ட நிர்வாகத்திலும் ஒருங்கிணைப்ப இல்லாததே எனவும் ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தலைமை தேர்தல் அதிகாரிகள் நாகை மாவட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.