திருப்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளி மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தொடர்ந்து, சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் இடுவாய் பகுதியை சேர்ந்த 17வயது மாணவர் ஒருவருக்கு சளி மற்றும் இருமல் தொந்தரவு இருந்துவந்தது. பின்னர், அந்த மாணவன் தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பின்னர், அந்த மாணவர் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் நேற்று மாணவர் பயின்ற பள்ளி மற்றும் வகுப்பறையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மாணவருடன் படிக்கும் நண்பர்கள் மற்றும் அவரது ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.