சென்னை போரூரில் இலவச மடிகணினி வழங்காததை கண்டித்து, ஆத்திரமடைந்த மாணவிகள் அரசு பள்ளியை முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தமிழக அரசு சார்பில் அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிகணினி வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பல இடங்களில் மடிகணின வழங்கவில்லை என மாணவ, மாணவிகள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், போரூர் அடுத்த சின்ன போரூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2017-18ம் கல்வியாண்டு படித்த மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து, மடிகணினி வழங்க வலியுறுத்தியும் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோருடன் பள்ளி முன்பு திரண்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த போலீசார் பள்ளி மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தேர்தல் நேரத்தில் மடிகணினி வழங்க கூடாது எனவும், தோ்தல் முடிந்த பிறகு மடிகணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின், மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனால், அதே கல்வியாண்டில் பல அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு மடிக்கணின் வழங்கவில்லை. இதனால், பல இடங்களிலும், மாவட்ட ஆட்சியல் முறையீட்டு கூட்டத்திலும் அவ்வப்போது மடிகணினி வழங்ககோரி ஆர்ப்பாட்டம், போராட்டம், மனு வழங்குதல் உள்ளிட்டவை நடந்து வருகிறது. மடிகணினி வழங்காததற்கு என்ன காரணம் பள்ளி கல்வித்துறை தரப்பில் முறையான விளக்கம் வெளியிடாமல் உள்ளது.