மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொது தேர்வு நடத்துவது, நீட் தேர்வு, ஜெஇஇ உள்ளிட்ட தேர்வு நடத்துவது தொடர்பாக ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், அமைச்சர்கள், துறை செயலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். தமிழகம் சார்பில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனிச் செயலாளர் உதயசந்திரன், பள்ளி கல்வி செயலாளர்கள், ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் தலைமை செயலகத்தில் காணொளி மூலம் பங்கேற்று தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். குறிப்பாக, முக்கியமாக நீட் தேர்வு வேண்டாம் என வலியுறுத்தினர். பின்னர், அமைச்சர் இருவர் கூட்டத்தில் தெரிவித்த கருத்துகளை குறித்து கூறினர். உயர் கல்வி அமைச்சர் பொன்முடி கூறுகையில், தேசிய தேர்வு முகமை இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான நீட் தேர்வை நடத்துகிறது. தமிழகத்துக்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்கள் கருத்து. இதுகுறித்து, ஏற்கனவே தமிழகத்தின் சார்பில் இரண்டு மசோதாக்கள் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த கல்வி ஆண்டு முதல் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை தமிழகம் ஏற்காது என இந்த கூட்டத்தின் மூலம் தெரிவித்துள்ளோம், இவ்வாறு அவர் கூறினார். அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறும்போது, சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 12ம் வகுப்பு பொது தேர்வு நடத்துவது தொடர்பாக தமிழக அரசின் கருத்தை 25ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுகுறித்து, தமிழக முதல்வருடன் கலந்து பேசி தமிழகத்தின் நிலைப்பாட்டை தெரிவிப்போம். தமிழகத்தில் பிளஸ் 2 பொது தேர்வு கண்டிப்பாக நடந்தே தீரும், இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர், தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், இந்த கூட்டத்தில் பேசிய உயர் கல்வி அமைச்சர், தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது என்றும், வழக்கம்போல பன்னிரென்டாம் வகுப்பு இறுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும், உறுதிபட தெரிவித்தார். உயர்கல்வி அமைச்சரின் இக்கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, தமிழக அரசு தனியே நீட் தேர்வை மாநில அளவில் நடத்த இருப்பதாக சில ஊடங்களில் செய்தி வந்துள்ளது, முற்றிலும் தவறானது, இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.