You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

கல்வியில் தனியார்மயம், வணிகமயம் ஒழிக்க வேண்டும் - கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு

கல்வியில் தனியார்மயம், வணிகமயம் ஒழிக்க வேண்டும் - கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு

கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு, ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கல்வியில் ஏற்றத்தாழ்வை ஒழிக்க உயர் கல்விச் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு எனும் சீர்திருத்த வழிமுறை மட்டும் நிரந்தரத் தீர்வாக அமையாது. கல்வியில் தனியார்மயம், வணிகமயம் போன்ற கேடுகளை ஒழிப்பதே நிரந்தரத் தீர்வாக அமையும்.

தொழிற்கல்விப் படிப்புகளான பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சேர்க்கை குறைந்த அளவில் உள்ள நிலையே இருப்பின், இந்நிலையைச் சரிசெய்திட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பரிந்துரை செய்ய, டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதியரசர் த.முருகேசன் தலைமையில் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. 

தமிழ்நாடு அரசு அமைத்துள்ள நீதியரசர் த.முருகேசன் அவர்கள் தலைமையிலான ஆணையம், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சமூகப் பொருளாதார நிலைகள், சந்திக்கக்கூடிய கல்வி இடர்ப்பாடுகள், கடந்த ஆண்டுகளில் பல்வேறு தொழிற்கல்வி நிறுவனங்களில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளது. 

இந்திய ஒன்றியத்தில் இணைந்துள்ள எந்த மாநில அரசும் இதுவரை செய்ய முன்வராத சமூக நீதிக் கடமையை திமுக அரசு செய்வது வரவேற்கத்தக்கது. 

அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகள் மட்டுமல்லாமல் ஏழைகளின் பள்ளிகளாக மாறியுள்ள அரசுப்பள்ளிகளின் நிலையும் இன்று மன வேதனையளிக்கும் நிலையில் உள்ளது. இந்நிலைமை மாறி கல்வி சிறந்த தமிழ்நாடு உண்மையிலேயே உருவாகவும் திமுக அரசு வழிகாணவேண்டும்.  

தமிழ்நாட்டில் 1980 க்குப் பிறகு தனியார் சுயநிதிப் பள்ளிகள் புற்றீசல் போல் அனுமதிக்கப்பட்டுள்ளன. நூறு பேர் வசிக்கக் கூடிய சிற்றூர்களுக்குக் கூட நான்கைந்து தனியார் பள்ளி வாகனங்கள் வருகின்றன. ஊரில் உள்ள பத்துக் குழந்தைகளும் பள்ளிக்கு ஓரிருவராக அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஒரு குழந்தை 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்குச் செல்லும். இன்னொரு குழந்தை 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்குச் செல்லும். ஆனாலும் உள்ளூரில் உள்ள அரசுப் பள்ளிக்கு ஏழைக் குழந்தைகள் இருந்தால் மட்டும் வருவார்கள். பல அரசுப் பள்ளிகள் இப்படித்தான் மடிந்து வருகின்றன. சாதிக்கொரு மயானம் போல, வசதிக்கொரு பள்ளி என்பது சமூக நீதியின் விளைநிலம் என்று பேசப்படுகின்ற தமிழ் மண்ணில் இருப்பது புதிய, நவீனப் பேரவலம். 

இன்று அரசுப்பள்ளிகளில் படிப்பவர்கள் பெரும்பாலோர் ஏழைகளாக உள்ளனர். தனியார் பள்ளிக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் கற்றல் வாய்ப்புகள் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. இதனால் 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களை விட அதிக மதிப்பெண் பெற முடிவதில்லை.

இதன் விளைவாக உயர் கல்விச் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் சமமான போட்டிக்கு வாய்ப்பற்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலை கடந்த இருபதாண்டுகளாக  அதிகமாகி வருகிறது. கடந்த இரண்டாண்டுகளாக நடக்கும் நீட் தேர்விலும் இதே நிலை எதிரொலிக்கிறது. 

அரசுப் பள்ளிகளை நம்பியுள்ளவர்கள் அதிகாரமற்றவர்களாக இருப்பதால் இந்த அநீதி இத்தனை நாட்களாகப் பெரிதாகப் பேசப்படவில்லை. சமமான வாய்ப்பின்மை என்ற பெரிய, புதிய சமூக அநீதி கல்வியில் உருவாக தனியார்மயம் முதற் காரணம். தனியார்மயத்தின் துணை விளைவாகிய வணிக மயம் இரண்டாவது காரணம். ஓரளவு வசதியான மற்றும் நடுத்தர வசதியான பெற்றோர்களின் அதீதக் கல்விக் கனவுகளால் தனியார் சுயநிதிக் கல்வித் தந்தைகளிடம் கருப்புப் பணம் கணக்கின்றி குவிந்து வருகிறது.  

தனியார் பள்ளி - அரசுப்பள்ளி, வசதியானவர்கள் - வசதியற்றவர்கள் என்ற அடிப்படையில் கல்வியில் ஏற்றத்தாழ்வு வளர்ந்துவிட்டது. இக்கொடிய சமூக அநீதி தற்போது வெட்ட வெளிச்சமாகி  வருகிறது. அதை மூடி மறைக்க  உயர் கல்விச் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு எனும் சீர்திருத்த வழிமுறை மட்டும் நிரந்தரத் தீர்வாக அமையாது. கல்வியில் தனியார்மயம், வணிகமயம் போன்ற கேடுகளை ஒழிப்பதே நிரந்தரத் தீர்வாக அமையும். இது குறித்து ஆராயவும் திமுக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு, அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.