தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பாகவும் 60,000 கணினி ஆசிரியர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் திமுக கழக ஆட்சிக்கு எங்களின் முழு ஆதரவையும் தெரிவிக்கின்றோம் என தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வெ.குமரேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசு பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் உலகத்தரத்திற்கு ஈடான கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் டாக்டர் கலைஞர் அவர்களால் 2008 - 09ம் ஆண்டு கணினி அறிவியல் பாடம் 6 முதல் 10ம் வகுப்பு வரை தனி பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டு 2011 ஆம் ஆண்டு சுமார் 50 லட்சம் மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாட புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டது. உன்னதமான கல்வி அரசு பள்ளிக்கு நடைமுறைப்படுத்த இருந்ததை ஆட்சி மாற்றத்தின் காரணமாக அதிமுக அரசு ஏழை மாணவர்கள் கணினி அறிவியல் கல்வியையும், பாடப்புத்தகங்களையும் வழங்காமல் பத்தாண்டுகள் கிடப்பில் வைத்துவிட்டது கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான கல்வியை முடக்கி வைத்த அதிமுக அரசுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். வருகின்ற திமுக ஆட்சியில் கலைஞர் தந்த கணினி பாடத்தை மீண்டும் அரசு பள்ளியில் உதிக்க செய்து அதற்கான கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டுகிறோம். இவ்வாறு அவா் அறிக்கையில் கூறியுள்ளார்.