You are at the right place to read the latest education news today in
Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on
our website - TN Education Info.
ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள அலப்பறையா என்ற வடிவேல் வசனத்தின்போல், கல்வியாண்டு தொடங்கவே இல்லை, அதற்கு முன்பே, அடுத்த கல்வியாண்டிற்கான கல்வி கட்டணத்தை கட்ட வேண்டும் என்ற தனியார் பள்ளிகளின் பண டார்ச்சர் நடுத்தர பெற்றோர் கழுத்தை நெறிக்க தொடங்கிவிட்டது.
இதன் எதிரொலியாக, பல மாவட்டங்களில் பெற்றோர்களின் அழுகுரல் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. அவ்வாறு, கோவையில் ஒரு பெற்றோர் தனது மனக்குமுறலை நீண்ட, நொடிய பதிவாக பதிவு செய்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த வாட்ஸ்ப் பதிவு உங்கள் பார்வைக்கு (சிறு, சிறு மாற்றங்களுடன்)
தமிழகத்தில் 2021-22 கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் (கல்வியாண்டு என்பது ஜூன் முதல் ஏப்ரல் வரை) துவங்கப்படாத நிலையில், ஆன்லைனில் பாடம் நடத்துவதாக கூறி பெரும்பாலான தனியார் பள்ளிகள், மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்வி கட்டணத்தை கறக்க தொடங்கிவிட்டதாக சரமாரி புகார்கள் எழத் தொடங்கியுள்ளது.
கடந்தாண்டு, கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தும் நோக்கில், ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் வசூலிக்க கூடாது என தமிழக அரசு கடந்த ஏப்ரல் 20, 2020 தேதியன்று அரசாணை பிறப்பித்தது மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.
கடந்தாண்டு, இந்த உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் கட்டணம் வசூலிக்காமல் எப்படி ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத இதர பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க முடியும் என தனியார் பள்ளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிப்படப்பட்டது.
மாண்புமிகு நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில்,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், மனித குலத்துக்கே சவாலாக உள்ளது. ஒவ்வொரு நாளும், மத்திய, மாநில அரசுகள், புதிய சவால்களை சந்தித்து வருகின்றன. தற்போதைய சூழலில், சரியானதாக தெரியும் பல முடிவுகள், பின்னர் தவறாக முடிந்து விடுகின்றன. எப்போது சகஜ நிலை திரும்பும் என்ற, தெளிவான நிலை இல்லாததால், இவ்வாறு ஏற்படுகிறது.
தொடர் ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார சரிவு, பலரது வாழ்வாதாரங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. தற்போது அசாதாரணமான சூழ்நிலையை சந்தித்து வருகிறோம். அரசு எடுக்கும் நிர்வாக முடிவில் தலையிடும் போது, நீதிமன்றங்களும் கவனமுடன் இருக்க வேண்டும். கல்வி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, அரசு பிறப்பித்த உத்தரவால், பாதிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள், இந்த வழக்கை தொடுத்துள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கும் குறைகளை பரிசீலித்து, இடைக்கால ஏற்பாட்டுக்கு வரும்படி, அரசிடம் நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி, ஒரு இடைக்கால ஏற்பாடு வந்துள்ளது. உடனடி தேவை என்னவென்றால், கல்வி நிறுவனங்கள் இயங்க வேண்டும். அதற்காக, அவர்களுக்கு நிதி தேவைப்படுகிறது. அரசு உதவி பெறாத இந்த நிறுவனங்கள், மாணவர்களிடம் இருந்து பெறும் கட்டணத்தை நம்பி உள்ளன.
ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும், சம்பளம் வழங்க பணம் தேவைப்படுகிறது. அதேநேரத்தில், பெற்றோர் பலரது நிலையை பார்க்கும் போது, அவர்களுக்கு வருமானம் இல்லை அல்லது, குறைந்த வருமானம் வருகிறது. அவர்களால், கட்டணத்தை செலுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. மாணவர்களையும் அப்படியே விட்டுவிட முடியாது. அவர்களை, கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும்.
இருக்கின்ற நிதியில் இருந்து இதுவரை, ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும், கல்வி நிறுவனங்கள் சம்பளம் வழங்கி உள்ளன. தொடர்ந்து, இதை மேற்கொள்ள முடியாது. வைரஸ் அச்சுறுத்தலால், இன்னும் எத்தனை மாதங்கள், இந்த சூழ்நிலையை எதிர்கொள்வோம் என்பது தெரியவில்லை. மூன்று தவணைகளாக, 75 சதவீத கட்டணத்தை வசூலிக்கலாம் என, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மீதி தவணை, 25 சதவீதத்தை, கல்வி நிறுவனங்கள் திறந்த பின் வசூலிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
எப்போது கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு, வகுப்புகள் துவங்கப்படும் என்பது தெளிவாக இல்லை. எனவே, கீழ்க்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. இந்த இடைக்கால உத்தரவு, தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.
கடந்த, 2019 - 20ம் கல்வியாண்டில் பெறப்பட்ட கல்வி கட்டணத்தின் அடிப்படையில், 40 சதவீத கட்டணத்தை, தனியார் கல்வி நிறுவனங்கள் வசூலித்து கொள்ளலாம். ஆகஸ்ட், 31 க்குள், இந்த கட்டணத்தை, மாணவர்கள் செலுத்த வேண்டும். 2019 - 20ம் ஆண்டுக்கான பாக்கி கட்டணம் இருந்தால், அதையும் செப்டம்பருக்குள் வசூலித்து கொள்ளலாம்.
மீதி கட்டணம், 35 சதவீதத்தை, கல்வி நிறுவனங்கள் திறந்து, வகுப்புகள் துவங்கிய பின், இரண்டு மாதங்களுக்குள் வசூலித்துக் கொள்ளலாம். கல்வி நிறுவனங்களுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும் நடவடிக்கையை, அதற்கான குழு உடனடியாக துவக்கி, எட்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். கட்டண நிர்ணய குழுவின் இறுதி முடிவுக்கு பின், மீதி கட்டணம் செலுத்துவது பற்றி முடிவெடுக்கலாம்.
சகஜ நிலை திரும்பும் வரை, நீதிமன்ற உத்தரவு வரும் வரை, சம்பளம் மற்றும் பஞ்சப்படியை உயர்த்தும்படி, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வற்புறுத்தக் கூடாது
பாடப் புத்தகங்களை இலவசமாக அல்லது குறிப்பிட்ட விலைக்கு வழங்கும்படி, கல்வி நிறுவனங்கள் முன்வைத்த வேண்டுகோளை, அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும்.
இதற்காக, கஷ்டப்படும் மாணவர்களின் விபரங்களை, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் இருந்து, அரசு பெறலாம். மாணவர்களின் நலன் கருதி, சாதகமான நிலையை அரசு எடுக்கும் என, நம்புகிறேன். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில்,
கடந்த கல்வியாண்டில் ஒவ்வொரு தனியார் பள்ளியும் ஒவ்வொரு வகுப்புக்கென்று தனியாக வாட்ஸ் ஆப் குழு உருவாக்கி அதன் மூலம் மாணவர்களுக்கு வீடியோக்களை அனுப்பி பாடம் நடத்தி வந்தனர்.
வீடியோக்களில் தங்கள் ஆசிரியைகள் சொல்வதை கேட்டு படித்து புரிந்து கொண்டு, பாடங்களை படித்து, நோட்டில் எழுதி, போட்டோ எடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியையின் வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்க வேண்டும். அதனை அவர்கள் திருத்தி அனுப்புகின்றனர். இப்படித்தான், ஒரு நாளைக்கு 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை இடைவேளையுடன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தனியார் பள்ளிகளில் எவரெல்லாம் கட்டணம் கட்டியிருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இந்த முறையில் பெரும்பாலான பள்ளிகளில் பாடம் நடத்தப்பட்டது. இதனால், ஆன்லைன் கல்வி துவங்கி பல மாதங்கள் கல்வி கட்டணம் செலுத்தாத குழந்தைகளின் பெற்றோர் சம்பந்தப்பட்ட ஆன்லைன் வாட்ஸ் அப் குழுவில் இருந்து மனசாட்சியின்றி நீக்கிவிட்டனர்.
தங்கள் குழந்தைகளின் கல்வி வீணாகி விடக் என்பதற்காக வட்டிக்கு பணம் வாங்கி கல்விக் கட்டணம் செலுத்தும் நிர்பந்தத்தை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள் ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், தமிழக அரசு 12ம் வகுப்பு தவிர, அனைவரையும் தேர்ச்சி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், 2021-2022ஆம் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், பெரும்பாலான தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணக் கொள்ளை தொடங்கி விட்டது. எந்த விதிகளுக்கும் உட்படாமல் சில தனியார் பள்ளிகளில் ஆண்டுக் கல்விக்கட்டணம் இவ்வளவு கட்ட வேண்டும் என ஆடியோ அனுப்பி பெற்றோர்களை மன உளைச்சலை செய்ய தொடங்கிவிட்டனர்.
*(தொகுப்பு கட்டணம் கட்ட வேண்டும் தொகுப்பு கட்டணம் என்னவென்று, விவரம் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் கூறுங்கள்)* எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறுதியிட்டு கூற முடியாத நிலையில், பள்ளிக்கூடங்களில் விளம்பரம் பதித்த யூனிஃபார்ம், ஸ்கூல் பேக், ஸ்போர்ட்ஸ் யூனிபார்ம், லஞ்ச் பேக், அடையாள அட்டை உள்ளிட்டவை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தி மாணவர்களின் பெற்றோர்களிடம் தொடர்பு கொண்டும், பள்ளி வாட்ஸ்அப் குழுவிலும் குரல் பதிவு செய்து மெசேஜ் அனுப்பியும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும், கட்டாயப் பணத்தை கட்டுமாறு கட்டாயப்படுத்தி வருகின்றனர்.
மேலும் அவர்களாகவே, ஒரு தேதியை நிர்ணயம் செய்துகொண்டு, இந்த தேதிக்குள் பணம் கட்டவில்லை என்றால், உங்கள் குழந்தை, அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்பில் சேர இயலாது என்று உளவியல் ரீதியாக அச்சுறுத்த தொடங்கி உள்ளனர். கொரோனா காலகட்டத்தில் தொழில் இல்லாமல், வருமானம் இழந்து, தவித்துக் கொண்டிருக்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், மேலும் என்ன செய்வதன்று புலம்பி வருகின்றனர்.
கடந்தாண்டு தனியார் ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்றுதான் நீதிமன்றத்திற்கு சென்ற இவர்கள், கட்டணம் கலெக்ட் செய்தபின், பணம் வசூலித்த தனியார் பள்ளிகள், தங்கள் கல்வி நிலையங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு டிமிக்கி கொடுத்தனர் மற்றும் பாதி சம்பளம் கூட கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.
இதுகுறித்து கோவை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டத்திலும் இப்பிரச்சனை நிலவு கொண்டிருப்பதால், இந்த பிரச்னை ஏதே அமெரிக்காவில் நடப்பதுபோல், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி, முதன்மை கல்வி அதிகாரிகள் அனைவரும் சைலைன்ட்டாக உள்ளனர் என்பதே அதிர்ச்சியான செய்தி.
அரசும், அதிகாரிகளும் மக்கள் பணி செய்வதற்காக மட்டுமே தவிர, விதிகளை மீறி நடந்துகொள்பவர்களுக்கு அரணாக நின்று காப்பாற்றுவதற்காக அல்ல என்பது புரிந்துகொள்ள வேண்டும், கடமையை செய்ய மறுக்கும் அதிகாரிகளும் தவறு இழைத்தவர்களே.