பள்ளி கல்வித்துறையின் ஒரு அங்கமாக விளங்குவது சம்க்ரா ஷிக்ஷா. தமிழில் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் என்று அழைக்கப்படும். இதன் செயல்பாடுகள் என்னவென்றால், மத்திய அரசின் கல்வி சார்ந்த திட்டங்களை, மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் செயல்படுத்துவது, கண்காணிப்பது உள்ளிட்டவை.
இந்த திட்டங்களில் முதன்மையானது அனைவருக்கும் கல்வி திட்டம், பள்ளி செல்லா குழந்தைகளை கண்டுபிடித்து, பள்ளியில் அனுமதித்து அவர்களுக்கான கல்வியை உறுதி செய்வது, பள்ளிகளுக்கு தேவையான கட்டிடங்கள் கட்டி கொடுப்பது, சிறப்பு குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிப்பது உள்ளிட்ட பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில திட்ட இயக்குனர் தலைமையில், மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் மேற்பார்வையில் இந்த திட்டங்கள் மாவட்ட அளவில் முறையாக செயல்படுகின்றனவா எனவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் இந்த திட்டங்களை செயல்படுத்த, மாவட்ட திட்ட கூறுகள் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர். குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால், இவர்கள் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிநியமனம் பெற்றவர்கள். இவர்கள் மாவட்டத்தில் ஆசிரியர் பயிற்றுநர்களாகவும், மாவட்ட திட்ட கூறுகள் ஒருங்கிணைப்பாளர்களாகவும் மாற்றப்பட்டு, மேற்கண்ட இந்த பணிகளை கவனித்து வருகின்றனர். (குறிப்பு இந்த தகவல் புதியவர்கள் அறிந்துகொள்ள) இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளிகளுக்கு சென்று திட்டங்கள் முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளதா என்று ஆய்வு நடத்துவது, மாணவர்களிடம் கற்றல் திறன் சோதிப்பது, பாட திட்ட முறைகளை கவனிப்பது, கல்வித்துறை கோரும் புள்ளி விவரங்களை சேகரிப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். தற்போது, பெரும்பாலான ஆசிரியர் பயிற்றுநர்கள் சம்க்ரா ஷிக்ஷா உயர் அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். அரசு விதிகளின் படி, ஒவ்வொரு மூன்று வருடத்திற்கு ஒருமுறை, அலுவலகத்தில் பணிபுரியம் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். ஆனால், சம்க்ரா ஷிக்ஷா, திட்ட கூறுகள் ஓருங்கிணைப்பாளர்கள் பணி மாற்றம் செய்யப்படாமல், 8 முதல் 10 ஆண்டுகள் வரை ஒரே இடத்தில் பணியாற்ற உயரதிகாரிகள் அனுமதித்து வருவது வேடிக்கையாக உள்ளது. இதுகுறித்து, ஆசிரியர் பயிற்றுநர் ஒருவர் கூறும்போது, ஒருவர் ஒரு அலுவலகத்தில் மூன்று ஆண்டுகள் மட்டுமே பணி புரிய வேண்டும் என்று விதி கூறுகிறது. ஆனால், ஆண்டாண்டு காலமாக ஒரே அலுவலகத்தில் பணியாற்றினால், நிர்வாகம் லஞ்சத்தில் திளைக்கும் அல்லது அதிகாரிகளுக்கு கைப்பாவையாக செயல்படுவார்கள் என்பது நிதர்சனம். ஊர்ஜீதப்படுத்தும் வகையில், கல்வித்துறை உள்பட பல துறைகளில் முறைகேடுகளும் அரங்கேறியும் உள்ளது. இதே நிலைதான், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திலும் ஆங்காங்கே சில இடங்களில் சில திட்டங்களில் மறைமுகமாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் துணையுடன் நடந்து வருகிறது. எங்களது கேள்வி என்னவென்றால், நீண்ட வருடங்களாக ஒரே இடத்தில் பணியிட மாற்றம் செய்வதினால் உயர் அதிகாரிகளுக்கு என்ன பாதிப்பு ஏற்பட போகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. கடந்த 2017 ஆண்டு, அதிகாரியாக இருந்த நந்தகுமார் ஐஏஎஸ் அவா்கள், இவர்களை பணியிட மாறுதல் அடிப்படையில் மாற்ற வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், சிறிது காலத்தில் அவர் மாற்றப்பட்டது பெரும் அதிர்ச்சி அளித்தது. அதன்பின், இந்த மாறுதல் என்பது தற்போது வரை கிடப்பில் உள்ளது. பின்னணியில், சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தற்போது இருக்கும் திட்ட கூறுகள் ஒருங்கிணைப்பாளர்கள் மாற்றக்கூடாது, நிர்வாக ரீதியாக பணிகள் பாதிக்கப்படும், புதியவர்கள் இந்த திட்ட பணிகளை நிர்வகிப்பதில் சிரமப்படுவார்கள் எனக்கூறி, மேலிடத்தில் அழுத்தம் கொடுத்துள்ளனர். அந்த அலுவலர்களின் நோக்கம் வேறு. சில மாவட்டங்களில், திட்ட கூறுகள் ஒருங்கிணைப்பாளர்கள் அதே அலுவலகத்தில் வேறு, வேறு திட்டங்களை சுழற்சி முறையில் அதே அலுவலகத்தில் இன்னும் பணியாற்றி வருகின்றனர். ஆனால், திட்ட கூறுகள மாறுகிறதே தவிர, திட்ட ஒருங்கிணைப்பாளர் மாற்றப்படுவதில்லை. இதுவே முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது. ஒருவேளை அருகாமை ஒன்றியங்களில் பணி மாறுதல் பெற்றாலும் கூட, அவர்களின் மாத ஊதியம், பயணப்படி ஆகியவை ஒன்றிய அலுவலகங்களில் பெற்றுக்கொண்டு, அதே மாவட்ட அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றனர். ஏன் இந்த பணிகளை ஆசிரியர் பயிற்றுநர்களான எங்களால் செய்ய முடியாதா?, இந்த அதிகாரிகளின் நோக்கம் என்னவாக இருக்கிறது, என்று அவர் காட்டமாக கேள்வி எழுப்பினார். மற்றொரு ஆசிரியர் பயிற்றுநர் கூறும்போது, மேல் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் மூன்றாண்டு விதிகளை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்வதில்லை. உயர் பதிவியில் இருப்பவர்கள் இப்படி அலட்சியமாக இருந்தால், மாவட்டத்தின் நிலை எப்படி இருக்கும் நீங்களே புாிந்துகொள்ள முடியும். இந்த விதிகளை பின்பற்றி, அவர்களை மாற்ற வேண்டும், சுழற்சி அடிப்படையில் மாறுதல் இந்த பணிகளை ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது எங்களின் நீண்ட வருட கோரிக்கையாக உள்ளது. தற்போது இருக்கும், மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்களாவது இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. (குறிப்பு: ஆசிரியர் பயிற்றுநர் கலந்தாய்வு தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது.)