திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் ஆணையம் தபால் வாக்கு செலுத்த முறையான ஏற்பாடு செய்யாததால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்கு அளிக்காமல் திரும்பினர்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பயிற்சிக்காக வந்தோம். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12சி விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்து, வாக்காளர் அட்டையின் விபரங்களையும் வழங்கினோம். இந்த நிலையில், நாங்கள் வாக்களிப்பதற்கான ஆவணங்கள் இன்னும் வந்து சேரவில்லை என கூறினர். இதனால், வாக்கு அளிக்க முடியாமல் திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டது. ஏனெனில் தொலைதூரங்களில் இருந்து வந்தவர்கள் இரவில் ஊர் திரும்ப வசதி இல்லை. எனவே, வரும் 3ம் தேதி மீண்டும் இங்கு நடக்கும் பயிற்சியின்போது, வாக்கு செலுத்த முடிவு செய்துள்ளோம். அதனால், இங்கிருந்து திரும்புகிறோம். இந்த குளறுபடிக்கு காரணமான தேர்தல் அலுவலர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த தேர்தலிலும் இவ்வாறே நடந்தது என்று அவர்கள் புலம்பினர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் 1,348 வாக்குசாவடி மையங்களில் பணிபுரிய 1,900 ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிப்காட்டில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளயில் நேற்று இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் திருப்பத்தூர், காரைக்குடி தொகுதிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தபால் ஓட்டுகளில் வரிசை எண், வாக்கு செலுத்துபவர்களின் பெயர் உள்ளிட்டவற்றை சரி பார்க்காமலும், ரிஜிஸ்டர்களில் பதிவு செய்து வாக்களிப்பவர்களிடம் கையெழுத்து பெறாமலும் தேர்தல் பிரிவு ஊழியர்கள் வாக்கு பெட்டிகளில் பெற்று சீல் வைத்துவிட்டனர். இதனால், திருப்புத்தூர், காரைக்குடி வாக்குப்பெட்டிகளில் செலுத்தப்பட்ட தபால் ஓட்டுகள் செல்லாதவையாக மாற்ற வாய்ப்பு உள்ளதாக கூறி, ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்ட வருவாய்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மானாமதுரை தாசில்தார் மாணிக்கவாசகம் சம்பவ இடத்திற்கு வந்து, திருப்புத்தூர் தொகுதியின் பெட்டியை திறந்து 19 நபர்களுக்கு மட்டும் ஒட்டுகளை திரும்ப கொடுத்து பூர்த்தி செய்து மீண்டும் வாக்குப்பெட்டியில் வைத்து சீல் வைத்தனர். அதற்குள் பயிற்சி வகுப்பு முடிந்ததால், தபால் ஒட்டு செலுத்திய ஆசிரியர்கள் ஊர்களுக்கு சென்றுவிட்டனர். அதனால் மீதம் உள்ள தபால் ஓட்டுகள் வெளியே எடுக்கப்பட்டு தாசில்தார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்த பயிற்சி வகுப்புக்கு வருவோரிடம் அதனை திரும்ப கொடுத்து சரிபார்க்கப்பட்ட, வாக்குப்பெட்டியில் போட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதேபோல் காரைக்குடி தபால் ஓட்டுகளையும் திரும்பி தர வேண்டும் என்று வலியுறுத்தி, ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏறப்பட்டது. மேலும் கோவை மாவட்டத்தில் ஒரு சில மையங்களில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான பேலட் ஷீட் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவித்தனர். மேலும் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான தேர்தல் பயிற்சி மன்னம்பந்தல் தனியார் கல்லூரியில் நடந்தது. அப்போது, தேர்தல் அதிகாரிகள் தபால் ஒட்டுக்கான விண்ணப்பம் கையில் வைத்துகொண்டே, வாக்கு செலுத்தகூடாது என்ற நோக்கத்தில் ஆசியர்கள், ஊழியர்களுக்கு விண்ணப்பம் வழங்காமல் அலைக்கழிப்பதாக அவர்கள் குற்றச்சாட்டிய நிலையில், திமுகவினர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி, தபால் ஒட்டுக்கான விண்ணப்பம் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்தார். இதனால், அவர்கள் 3 மணி நேரமாக அலைக்கழிக்கப்பட்டனர். பின்னர், தபால் ஓட்டு செலுத்தினர்.