பிளஸ் 2 தேர்வுக்கான முன்னேற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தொடக்க, நடுநிலை பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. அதேபோல், 9 முதல் 11ம் வகுப்புகளுக்கு தொடங்கப்பட்டு, கொரோனா பீதியால் தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டனா்.
அதே நேரத்தில் பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டப்படி நடக்கும் என அரசு தெரிவித்துள்ளது. மீண்டும் கொரோனா பரவல் காரணமாக பிளஸ்2 வகுப்புக்கும், தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அரசு ஏற்கவில்லை. இதனால், திட்டமிட்டப்படி பிளஸ்2 தேர்வு நடைபெறும் என்று எதிர்பாா்க்கப்படுகிறது.
இதன்படி, பிளஸ் 2 தேர்வு தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி முதன்மை கல்வி அலுவலர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 3ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் விரைந்து முடிக்க வேண்டும். தேர்வுக்கான விடை எழுதும் முதன்மை தாள்கள் மற்றும் மாணவர்களின் தகவல் இடம்பெறும் முகப்பு சீட்டை ஒன்றாக இணைக்க வேண்டும்.
மொழிபாடங்களுக்கு 30 பக்கங்களுக்கு புள்ளியிடப்பட்ட, கோடிட்ட வெற்றுத்தாள்கள் வழங்கப்படும். கூடுதல் விடைத்தாள்களும் அதேபோல் வழங்கப்படும். உயரியலுக்கு, தாவரவியல், விலங்கியல் என தனித்தனி முதன்மை தாள்கள், ஒரே முகப்பு தாளுடன் வழங்கப்படும். கணக்குப்பதிவியலுக்கு, கட்டங்கள் உள்ள விடைத்தாள்கள் வழங்கப்படும்.
வரலாறு தேர்வுக்கு இந்திய வரைபடம் மற்றும் உலக வெளிப்புற வரைப்பட தாள் இணைக்கப்படும். புவியியலுக்கு ஒரு வெளிப்புற வரைப்பட தாள் தரப்படும். வணிக கணிதம், வரை கட்டதாள் தரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.