தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளும், வரும் 8ம் தேதி அன்று துவங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்கை) முனைவர் மா.கல்யாணசுந்தரம் அவர்கள் கூறியதாவது, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கீழ் இயங்கி வரும் 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்பு கல்லூரிகள் பயிற்றுவிக்கப்படும் பத்து இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடத்திற்கான கல்லூரி வகுப்புகள் கொரோனா விடுமுறைக்கு பின் வரும் 8ம் தேதி முதல் துவங்கும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான (2020-21) கல்லூரி வகுப்புகள் வரும் 15ம் தேதி அன்று துவங்குகிறது. மேலும், மாணவ, மாணவிகளின் விடுதிகள் வழக்கம்போல் வரும் 8ம் தேதி முதல் இயங்கும். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளின்படி பின்பற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.