திமுக ஆட்சிக்கு பின், பல்வேறு துறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு மற்றும் ஆஸ்திரேலிய நாட்டு பல்கலைக்கழகங்கள் இணைந்து உயர்கல்வியில் பறிமாற்றம் செய்துகொள்ள 83 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று தமிழ்நாட்டின் உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார். அத்துடன் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு தூதரக அதிகாரிகளுடன் உடனான சந்திப்பும் நடந்தது. அந்த சந்திப்பில் கல்வி பறிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இரு நாட்டு கல்வி அமைச்சர்களும் கையெழுத்திட்டனர். பின்னர், உயர்கல்வி அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி உயர்கல்வித்துறையின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகளுடன் கல்வி தொடர்பான தகவல் ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் தமிழக பல்கலைக்கழகங்களின் கல்வி பறிமாற்றங்களுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. மேலும் பல பல்கலைக்கழகங்கள் உருவாக்கவும், உயர்கல்வித்துறை வளர்ச்சிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பு வெற்றிகரமான சந்திப்பாக இருந்தது. கல்லூரிகளில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கும். தமிழகத்தில் கல்லூரி திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முதல்வர் முடிவுகள் எடுத்து அறிவிப்பார். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.