ஏப்ரல் 6ம் தேதி நடக்கும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முன்னிட்டு, தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் சுமார் 18,000 ஆசிரியர்கள், அரசு ஊழியர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இதில் 15,541 பேருக்கு கடந்த 21ம் தேதி முதல் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பல்வேறு காரணங்களால் 369 பேர் பங்கேற்கவில்லை.
இவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கான விசாரணை பழைய கலெக்டர் கட்டிட அலுவலகத்தில் கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயபிரீத்தா தலைமையில் விசாரணை நேற்று நடந்தது. 369 பேரில் 44 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள். பயிற்சியில் பங்கேற்காதவர்கள் மருத்துவ சான்றிதழிடன் ஆஜராக விளக்கமளித்தனர். பெரும்பாலும் கர்ப்பிணிகள், கைக்குழந்தைகள், கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் என பலர் சிரமப்பட்டு வந்து விளக்கம் அளித்தனர். அவர்களிடம் இருந்து எக்ஸ்ரே, ஸ்கேன், இசிஜி, எக்கோ மருத்துவ அறிக்கை மற்றும் மருத்துவர்கள் வழங்கிய சான்றுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து அரசு ஊழியர்கள் கூறுகையில், நாங்கள் பங்கேற்க முடியாதது குறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் வழங்கியுள்ளோம். கொரோனா பரவி வரும் நிலையில் எங்களுக்கு விலக்கு அளிக்கலாம். ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு யாருக்காவது கொரோனா தொற்று இருந்தால் என்ன செய்வது, அவர்கள் கேள்வி எழுப்பினர். விசாரணை அலுவலர்கள் கூறுகையில், தேர்தல் பயிற்சியில் பங்கேற்காதவர்களை விசாரிக்கிறோம். அவர்கள் கூறும் காரணம் சரியாக இருந்தால், விலக்கு அளிக்கப்படும். பணி ஒதுக்கீடு பெற்றவர்கள் 27ம் தேதி நடக்கும் பயிற்சியில் பங்கேற்க வேண்டும். இல்லையெனில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும், என்றார். தலைமை ஆசிரியர் மயக்கம் துறையூர் கீழ்குன்னப்பட்டி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சித்ராவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இந்த நிலையில் கணவர் ராேஜந்திரனின் உதவியுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் விளக்கம் அளித்தார். அப்போது, அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால், அறையின் ஓரமாக படுக்க வைக்கப்பட்டார். ஏற்கனவே உடல்நிலை முடியாததால் தேர்தல் பணி வேண்டாம் என கூறியிருந்தோம். இங்கு வர சொல்லியதால், வந்து விளக்கம் அளித்தோம், என்றார்.