வேலைவாய்ப்பு அலுவலகம் பணி நியமனம் செய்ய வேண்டும் – தமிழக அரசுக்கு கோரிக்கை
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு, நிறுவனத் தலைவர் சா.அருணன் வெளியிட்ட அறிக்கை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோளாக, அடிப்படை பணியாளர்கள் நேரடி நியமனத்தை ரத்து செய்து, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அடிப்படை பணியாளர்களான அலுவலக உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள், இரவு காவலர்கள் சமையலர்கள், கிராம நிர்வாக உதவியாளர்கள் உள்ளிட்ட அடிப்படை பணியாளர்களை நேரடி நியமனம் செய்தார்கள். இதில் அதிக அளவில் தவறுகள் நடந்தன. தவறுகளை களைய வேண்டுமானால் டாக்டர் கலைஞர் ஐயா ஆட்சி காலத்தில் அடிப்படை பணியாளர்கள் அனைவரையும மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக பதிவுமூப்பு அடிப்படையில் நேர்மையான முறையில் பணி நியமனம் செய்தார்களோ, அதனையே பின்பற்றி கடந்த ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட நேரடி பணி நியமனத்தை முழுவதுமாக ரத்து செய்து, அடிப்படை பணியாளர்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாகவே பணி நியமனம் செய்ய வேண்டும். கொரோனா கொடுந்தொற்று காலத்திலும் இரவு பகல் பாராமல் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திக் கொண்டு பணியாற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் பாராட்டு தெரிவிக்கிறது. இவ்வாறு, அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.