தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அவர்களுக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் கடிதம் அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில், தமிழக சட்டமன்ற பொதுதேர்தல் வாக்கு பதிவு மையங்களில் இந்தி மட்டும் பேச படிக்கூடியவர்களையும் மற்றும் அங்கன்வாடி சமையலர் ஆயம்மாக்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது, வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மத்திய அரசு ஊழியர்கள் சத்துணவு அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறை ஊழியர்களை நியமிக்கப்படுவார்கள். பி1, பி2,பி3 என அலுவலர்களாக அவர்கள் ஊதியத்தின் அடிப்படையில் வாக்குபதிவு அலுவலர்களாக நியமனம் செய்வது வழக்கம்.
இம்முறை மத்திய அரசு ஊழியர்களாக இந்தி மொழியை மட்டும் பேசுபவர்களை பி1அலுவலராகவும் பி2 அலுவலராகவும் பி3 அலுவலராகவும் நியமனம் செய்திருக்கிறார்கள். பி1 பணி என்னவென்றால் வாக்காளர் பட்டியளில் உள்ள வாக்காளர் பெயரை அரசியல் கட்சி முகவர்களுக்கு தெரிவிக்கும் விதமாக வாசிக்க வேண்டும் இந்தி மட்டுமே பேசும் வாசிக்கும் வடநாட்டவரை பி1 அலுவலராக நியமனம் செய்தால் எப்படி வாசித்து வாக்காளரை அடையாளப்படுத்த முடியும்.
ஏனெனில் வாக்காளர் பட்டியல் முழுக்க முழுக்க தமிழில் மட்டுமே இருக்கும் என்பதை தேர்தல் ஆணையத்திற்கு நினைவுப்படுத்த விழைகின்றோம். பி2 அலுவலர் பணி என்னவென்றால் வாக்காளர்கள் கையில் மை வைத்துவிட்டு அவர்களை எடுத்து வரும் அடையாள அட்டை என்னவென்று குறிப்பிட்டு அதன் எண் மற்றும் விவரத்தை எழுதவேண்டும். இவர்களால் எப்படி வாக்காளர்களிடம் தமிழில் விவரத்தை கேட்க இயலும் தேர்தல் ஆணையம் யோசிக்க வேண்டும்.
அதேபோன்று சத்துணவு சமையல் செய்பவர்கள் உதவியாளர்கள் படிப்பறிவு குறைவானவர்கள் அவர்களை பி2 அலுவலராக நியமனம் செய்தால் எப்படி விவரத்தை அவர்களால்எப்படி விரைவாக எழுத முடியும். இதனால் வாக்கு பதிவு மையங்களில் பெரும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பாக அமையும்.
ஆதலால் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ஐயா அவர்கள் இந்தி மொழியை மட்டும் தெரிந்த மத்திய அரசு ஊழியர்களையும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி சமையலர் மற்றும் உதவியாளர்களை தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.