அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து ஆறு நாட்கள் பணி செய்வதால் ஞாயிறன்று தேர்தல் பயிற்சி வகுப்பை நடத்துவதை கைவிட வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திற்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத்தலைவர் சா.அருணன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. முதற்கட்ட பயிற்சி வகுப்பு முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் பெரும்பாலான மாவட்டங்களில் ஞாயிற்று கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால், திங்கள் கிழமை முதல் சனி வரை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொடர் பணியில் இருப்பதால் ஞாயிறும் பயிற்சி வகுப்பு என்றால் விடுமுறையே இல்லாமல் எவ்வாறு அவர்களால் தொடர்ந்து பணி செய்யமுடியும் என்பதை தேர்தல் ஆணையம் புரிந்துகொள்ள வேண்டும். அதிலும் பெரும்பாலானோர் பெண்கள் குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் என்பதை தேர்தல் ஆணையம் உணரவேண்டும். ஞாயிறு பயிற்சி வகுப்பை கைவிட்டு வேலை நாட்களில் பயிற்சி வகுப்பை நடத்த வேண்டும் அல்லது ஞாயிறு பயிற்சி வகுப்பு இருக்கும் பட்சத்தில் சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என்பதை தமிழக தலைமை தேர்தல் ஆணையரை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுகொள்கிறது. இவ்வாறு, அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.