இந்த சமூகம் ஒவ்வொரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, ஆசிரியர்கள் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். இதற்கு கடந்தகால சான்றாக புயல் பாதிப்பு, கொரோனா நெருக்கடி காலத்தில் ஆசிரியர் சமூகத்தின் பணி அளப்பறியது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் தங்களால் இயன்றவரை நிதி திரட்டி, அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவிகளை வழங்கியுள்ளனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோவை மாவட்டம் சார்பில் கடந்த இரண்டு வாரங்களாக, சங்க நிர்வாகிகள் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மனிதர்களை உதவும் நோக்கில், ஆசிரியர்களிடம் நிதி திரட்டியுள்ளனர். மேலும், இந்த நிதியை பயன்படுத்தி, ரூ.3 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவிகளை வாங்கி, கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் அவர்களிடம் வழங்கியுள்ளார். இந்த மூன்று இயந்திரங்கள், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மற்றும் வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியர் சந்திப்பின்போது, மாவட்ட செயலாளர் அரசு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.