தமிழகத்தில் கடந்த 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றனர். பள்ளி தொடங்கிய ஒரிரு நாளிலேயே, ஒரு சில இடங்களில் ஆசிரியர்கள், மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இருந்த போதிலும், கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை எனவும், காய்ச்சல் அறிகுறி மட்டும் இருந்ததாகவும், கொரோனா பரிசோதனையில் ஆசிரியர்கள் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை எனவும் நேற்று கூறியிருந்தார். இதற்கிடையில், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, இரு மாணவர்களுக்கும், ஓரு மாணவிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், மூவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பள்ளி மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடங்கியுள்ளது. பிற மாணவ, மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளனர்.