தமிழக அரசு 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்த நிலையில், முன்னதாக அனைத்து வகை பள்ளிகளில் தேர்வுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது, குறிப்பாக நாமினல் ரோல் தயார் செய்து, மாணவர்களிடம் தேர்வு கட்டணம் வசூலித்து கல்வித்துறையிடம் வழங்கப்பட்டது. இதற்கிடையில் தேர்வு ரத்தான நிலையில், வசூலிக்கப்பட்ட தேர்வு கட்டணம் திரும்பி ஒப்படைக்கப்படுமா என்று தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். கொரோன வைரஸ் காரணமாக கடந்தாண்டு மார்ச் இறுதியில் கல்வி நிறுவனங்கள் காலவரையின்றி மூடப்பட்டு, கடந்தாண்டு 10ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 11, 12ம் வகுப்புகளுக்கு விடுபட்ட பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டில் இணையதளம் மூலம் வகுப்புகள் நடந்தது. பின்னர், 9 முதல் 12ம் வகுப்பு வரை படிப்படியாக நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டு பள்ளிகள் செயல்பட தொடங்கின. 12ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையும் வெளியானது, பின்னர் 9 முதல் 11ம் வகுப்பு வரை என அனைவரும் தேர்ச்சி என அறிவித்தது. இந்த தேர்ச்சி அறிவிப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு உடன்பாடில்லை. இந்த நிலையில் தனியார் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டணத்தை அரசு வசூலித்தது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.115ம், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.175ம் செய்முறை தேர்வுயையும் சேர்த்து எழுதும் மாணவர்களுக்கு ரூ.225ம் தேர்வு கட்டணமாக வசூல் செய்தனர். தற்போது அனைவரும் அனைவரும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டதால், அரசு ஏற்கனவே வசூலித்த தேர்வு கட்டணங்களை மாணவர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் இந்த கட்டணத்தை அரசு திருப்பி தர வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து சென்னையை சேர்ந்த ஒரு பெற்றோர் கூறும்போது, எனது மகன் ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறான். ஒட்டுமொத்த கட்டணமாக ரூ.23,000 கட்டிவிட்டேன். ஆனால், மாணவர்களுக்கான ஆன்லைன் கல்வி முறையாக நடத்தப்படவில்லை, தேர்வு கட்டணம் செலுத்தப்பட்டது. கொரோனா கால கட்டத்திலும், பெரும்பாலான பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டு, கல்வி கட்டணத்தை பள்ளிகளுக்கு செலுத்தி உள்ளனர். குறைந்தபட்சமாவது தேர்வு கட்டணத்தை மாணவர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.